திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களாக அதிகளவு பக்தர்கள் தொடர்ந்து அதிகளவு வருகின்றனர். இதனால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,214 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.4.81 கோடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு 4.18 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.25 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கடந்த 10 நாட்களாக பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் சுமார் 18 மணி முதல் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
