×

தலித் மாணவி கொலைக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மீது தடியடி: சமாஜ்வாதி தலைவர் கண்டனம்

 

மீரட்: மீரட்டில் தலித் மாணவி கொலைக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் ரவ்டா பகுதியில் கடந்த மே 15ம் தேதி காணாமல் போன தலித் கல்லூரி மாணவியான லலிதா கவுதம் (20), கடந்த மே 17ம் தேதி கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்; இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மே 18ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் கடந்த 8ம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தலித் சமூகத்தினரும் மீரட் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தைக் கலைக்க போலீசார் நடத்திய கொடூர தடியடியில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

மேலும், போலீஸ் வாகனத்தில் அடைக்கப்பட்டிருந்த ரவி கவுதம் என்ற போராட்டக்காரரை மீரட் எஸ்பி அவினாஷ் பாண்டே கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த போலீஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘பாஜக ஆட்சியில் போலீசார் அநீதி இழைப்பதில் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்’ என்று கூறியுள்ளார்; மேலும் ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் போலீஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Samajwadi ,Meerut ,Dalit College ,Rawda ,Meerut, Uttar Pradesh ,
× RELATED விஜய் பேசும் போது நாகரிகத்துடன் பேச...