×

மாநிலம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அனைத்து கமிஷனர்கள், ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்க அனைத்து கமிஷனர்கள் மற்றும் ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனையை தடுக்க டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேற்று அனைத்து கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.

அதில், மாநிலம் முழுவதும் போதை பொருள் கடத்தல் வலையமைப்புகளை முறையாக தடுக்கவும், கடத்தல் பொருட்களை ஒழிக்கவும், அனைத்து நகரங்களின் காவல் ஆணையர்கள், மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தங்களது அதிகார வரம்புக்குள் இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒரு மாத காலம் தீவிர போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம், கடத்தல் பொருட்கள் அதிகபட்சமாக பறிமுதல் செய்வதும், போதை பொருள் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதும் ஆகும். இது தொடர்பாக இந்த நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டி கட்டாய செயல்பாடுகளை விவரிக்கும் ஒரு விரிவான செயல் திட்டம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்ச கள செயல்திறனை உறுதி செய்வதற்காக, மண்டல ஐஜிக்கள் மற்றும் சரக டிஐஜிக்கள் மாவட்டங்களில் நடைபெறும் செயல்பாடுகளை நேரடியாக மேற்பார்வையிட வேண்டும். தினமும் வழக்குகளின் முன்னேற்றத்தை கண்காணித்து, மாவட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மற்றும் கள பிரிவுகளுக்கு முறையாக ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

இந்த குறிப்பிட்ட ஒரு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் பறிமுதல்கள் மற்றும் குற்றவாளிகளின் கைதுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும். போதை பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு திங்கள் கிழமைகளில் நடைபெறும் மாநில அளவிலான சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்படும். சென்னையில் மின்சார வாரிய குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபி இந்த நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டும். பிரிவு அதிகாரிகள், நடவடிக்கையின் முடிவுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் கட்டுப்பாட்டு அறையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு டிஜிபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : TGB ,Maheshkumar Agarwal ,Chennai ,DGP ,Maheshkumar ,
× RELATED ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை.!! மக்கள் மகிழ்ச்சி