×

டிஎன்பிஎல் மினி ஏலம்: ரூ.14.45 லட்சத்துக்கு விைலபோன அஷ்வந்த்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெருமையுடன் நடத்தும் ‘ஸ்ரீராம் கேபிடல் தமிழ்நாடு பிரீமியர் லீக்’ டி20 தொடரின் 10வது சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விறுவிறுப்பாக நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தொகுத்து வழங்கினார். இந்த ஏலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 783 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்றன. இன்றைய ஏலத்தில் அணிகளுக்கிடையே நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் சில இளம் மற்றும் அனுபவமிக்க வீரர்கள் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

நடப்பு ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.14.45 லட்சத்துக்கு அஷ்வந்த் வால்தாபாவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தன்வசப்படுத்தியது. ஆல்-ரவுண்டராக அறியப்படும் முக்கிலேஷை, நெல்லை ராயல் கிங்ஸ் அணி ரூ.13.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. சித்தார்த் மகாதேவனை ₹8.70 லட்சம் கொடுத்து மதுரை பாந்தர்ஸ் அணி வாங்கியது. இந்த தொடரில், 2 முக்கிய அணிகள் புதிய அடையாளங்களுடன் மற்றும் புதிய பொலிவுடன் களம் காணவிருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சீசன் போட்டிகள் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக ஆகஸ்ட் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. பெண்களுக்கான கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், இந்த சீசனில் ஒரு முக்கிய மைல்கல்லாக இரண்டு மகளிர் கண்காட்சி போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் உட்பட ஒட்டுமொத்த டி.என்.பி.எல் தொடரின் விரிவான போட்டி அட்டவணை இன்னும் சில தினங்களில் முழுமையாக வெளியாகும்.

Tags : TNPL ,Ashwanth ,Chennai ,Shriram Capital Tamil Nadu Premier League' T20 series ,Tamil Nadu Cricket Association ,Abhinav… ,
× RELATED மகளிர் உலக கோப்பை டி20: பைனலில் இங்கிலாந்து