×

ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வராததால் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது யார்?: நன்கொடை திருட்டுக்கு மத்தியில் 6ம் தேதி ஆலோசனை கூட்டம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ஒன்றிய அல்லது மாநில அரசு நிதி உதவிகளோ, நிர்வாகக் கட்டுப்பாடோ வழங்காததால் அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையானது, ஒன்றிய அரசுக்கோ அல்லது உத்தரப்பிரதேச மாநில அரசுக்கோ கட்டுப்பட்டது அல்ல என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி தகவல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தை தகவல் ஆர்வலர் நீரஜ் ராஜ் நாடினார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அறக்கட்டளை பொது அதிகார அமைப்பா அல்லது தன்னாட்சி அமைப்பா என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பதிலை பெற்று ஆய்வு செய்து முடிவு செய்யுமாறு தகவல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த அறக்கட்டளை ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டுள்ளதாலும், இதற்கு ஒன்றிய அல்லது மாநில அரசுகளின் நிதி உதவியோ அல்லது நிர்வாகக் கட்டுப்பாடோ இல்லாததாலும், இதுவொரு பொது அதிகார அமைப்பு இல்லை என்றும், இதன் செயல்பாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வராது என்றும் தகவல் ஆணையம் தனது இறுதி உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது எழுந்துள்ள நன்கொடை திருட்டு புகார் தொடர்பாக தார்மீக அடிப்படையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோரின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய இந்த அறக்கட்டளையின் கூட்டம் வரும் 6ம் தேதி கூடவுள்ளதால், அதன் நிர்வாக அமைப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளையானது உறுப்பினர்களால் உள்நாட்டில் நிர்வகிக்கப்படும் தன்னாட்சி அமைப்பாக இருப்பதால், சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க நாட்டின் எந்தவொரு சட்டப்பூர்வ அமைப்புக்கும் அதிகாரம் இல்லை என்பதும், அவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்வது மட்டுமே ஒரே வழி என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் 4 பேருக்கு வாக்குரிமை இல்லை, ஒருவர் இறந்துவிட்டார்; மீதமுள்ள 10 உறுப்பினர்களில் ராய் மற்றும் மிஸ்ரா இக்கூட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்பதால், முடிவுகளை எடுக்க குறைந்தபட்சம் 6 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து அவசியமாகிறது.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் வீட்டை பதிவு செய்யப்பட்ட முகவரியாகக் கொண்டு, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் கட்டுமானக் குழு தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிருபேந்திர மிஸ்ராவும், பிற முக்கிய பொறுப்புகளில் பல்வேறு சமயத் தலைவர்களும் உள்ளனர். இதில் ஒன்றிய மற்றும் மாநில அரசு பிரதிநிதிகளாக உள்ள பிரசாந்த் லோகண்டே (ஐஏஎஸ்), சஞ்சய் பிரசாத் (ஐஏஎஸ்), சஷாங் திரிபாதி (ஐஏஎஸ்) ஆகிய அரசு அதிகாரிகளுக்கு வாக்குரிமையோ அல்லது முடிவெடுக்கும் அதிகாரமோ இல்லை என்பதுடன், வரும் 6ம் தேதி நடக்கும் இந்த முக்கிய கூட்டத்தில் அறக்கட்டளையின் ஒட்டுமொத்த கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Ayoti Ramar Temple Foundation ,EU ,Iyoti ,Union Ministry of the Interior ,UTTAR PRADESH STATE IOTHI RAMAR ,
× RELATED சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை