×

சிபிஐ அதிகாரிபோல் நடித்து பணமோசடி சென்னை வாலிபருக்கு சிறை தண்டனை

புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம், வாட்ஸ்-ஆப் வீடியோகால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், தன்னை சிபிஐ அதிகாரியாக அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது தங்களது பெயரில் மற்றொரு சிம்கார்டு இணையவழி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதால், உங்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இதனால் அவர் பதற்றமடையவே, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் அபராதத் தொகை செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். அதை நம்பிய அரசு ஊழியரிடம் மொத்தம் ரூ.73 லட்சம் வரை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக பணமாக பெற்றுள்ளார். பின்னர் இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனக் கூறவே, அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பிறகே நூதன மோசடியில் தான் சிக்கிவிட்டதை உணர்ந்த அரசு ஊழியர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், மோசடியில் ஈடுபட்ட ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த பீரக வம்சி (32) என்பவரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் இவர் மீது பல்வேறு மாநிலங்களில் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நடுவர் யஷ்வந்த் ராவ் இங்கர்சால் தீர்ப்பளித்தார். குற்றவாளி பீரக வம்சிக்கு 250 நாட்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags : Chennai ,CPI ,Puducherry ,Retiarpalaya ,WhatsApp ,CBI ,
× RELATED செங்குன்றம் அருகே 2 ஏடிஎம் கண்ணாடிகள் 10...