மங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட (Dakshina Kannada) மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூலை 2ஆம் தேதி(நாளை) அன்று மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தர்ஷன் எச்.வி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில், ஜூலை 2 அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை உத்தரவானது அங்கன்வாடி மையங்கள் முதல் இரண்டாம் ஆண்டு பியூசி (2nd PUC) வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆறுகள், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
