- சட்டமன்ற சட்டமன்ற செயலகம்
- கரூர் சட்டமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
- எஸ்.பி. வேலுமணி
- சி.வி.சண்முகம்
சென்னை: கரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு வந்தது முதல் தினந்தோறும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், 25 எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்புகளை பறித்து உத்தரவிட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அன்றைய தினமே தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அடுத்தாக விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். இவர், நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக 5 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 227 ஆக குறைந்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
