வெனிசுலா: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்ந்துள்ளது. வெனிசுலா நாட்டின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நடந்தன. முதலில் 7.2 ரிக்டர் அளவில் சான் பெலிப் அருகே நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் தாக்கியது. 1900ம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காரகஸ் மற்றும் துறைமுக நகரமான லா குவைரா உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்துள்ளன.
அந்த நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறுகையில், ‘‘பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதில் பலி எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. 2980 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளுக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் வெனிசுலா வந்துள்ளனர்’’ என்றார். சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் மின்சாரம் மற்றும் செல்போன் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனம் செல்போன் மற்றும் இணைய சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி இரவு பகலாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது. இந்நிலையில், வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்ந்துள்ளது. 3,360 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 50,000 பேர் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
