- சட்டமன்ற உறுப்பினர்
- Thiruvotiyur
- டவேகா
- சட்டமன்ற உறுப்பினர்
- செந்தில்குமார்
- திருவோட்டியூர் விம்கோ
- பொதுச்செயலர்
- எம். ஆனந்த்
- அமைச்சர்
- ஆனந்தை
திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகரில் திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான எம்.ஆனந்த் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். திருவொற்றியூர் வருகை தந்த அமைச்சர் ஆனந்தை வரவேற்று அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்திருந்தனர். குறிப்பாக, திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் சுமார் 40 அடி உயர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் இவ்வளவு பெரிய பேனர் வைத்திருக்கிறார்களே காற்றில் கீழே சரிந்தால் விபத்து ஏற்படுமே எனக்கூறி முகம் சுளித்தனர்.
அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் தூண்களில் பேனர்கள் மற்றும் சென்ட்ரல் மீடியனில் கொடிக்கம்பங்களை விதிமீறி கட்டியிருந்தனர். மேலும் மணலி மண்டலம் 18வது வார்டு எம்எப்எல் அருகே மாதவரம் விரைவு சாலையில் பேருந்து நிழற்குடையை மறைத்து தவெக வினர் அமைச்சர் ஆனந்தை வரவேற்று பேனர்களை வைத்து பேருந்து நிழற்குடைய முற்றிலுமாக மறைக்கப்பட்டது.இதனால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் தவெகவினர் இடையூறு ஏற்படுத்தினர். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் ஆனந்த் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவும், தூய்மை பணியாளர்களுக்கு உணவு, புடவை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தூய்மை பணியாளர்கள் அங்கு கூடியிருந்தனர்.
அப்போது அமைச்சர் ஆனந்த் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் அலுவலகத்திற்கு உள்ளே விஐபிகளின் காலணிகள் ஏராளமாக இருந்ததால், அமைச்சர் வந்தால் இடையூறாக இருக்கும் என்பதற்காக தவெக நிர்வாகிகள் அங்கு உணவு சாப்பிட வந்திருந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்து, அங்கு இருந்த காலணிகளை எல்லாம் எடுத்து வெளியே போடும்படி கூறினர். இதைக் கேட்ட தூய்மை பணியாளர்கள் முதலில் சற்று தயங்கினாலும், முக்கிய அமைச்சர் நிகழ்ச்சி என்பதால் பயந்து, அங்கிருந்த காலணிகள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தனர். இதைப் பார்த்த ஒரு சில தூய்மை பணியாளர்கள், கட்சியினர் காலணியை அவர்களே எடுத்து போடலாம். ஆனால் சாப்பாடு தருகிறோம் என்று கூறி வரவழைத்து எங்களை காலணி எடுக்க வைக்கிறார்களே என புலம்பியபடி காலணிகளை எடுத்து வெளியே வைத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
