×

ஆதார் மட்டுமில்லை.. பாஸ்போர்ட் இருந்தாலும் நீங்கள் இந்திய குடிமகன் இல்லை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சக அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை

 

புதுடெல்லி: ஆதார் மட்டுமல்ல… பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் நீங்கள் இந்திய குடிமகன் இல்லை என்ற ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சக அறிவிப்பால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 14வது பாஸ்போர்ட் சேவா திவஸ் கொண்டாட்டம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பாஸ்போர்ட் தொடர்பாக விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இந்தியாவில் பாஸ்போர்ட் என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒருவரது குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக பாஸ்போர்ட்டை கருத முடியாது என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி என்றால் இந்தியாவில் குடியுரிமைக்கான உண்மையான ஆதாரம் எது என்ற விவாதம் எழுந்துள்ளது. பாஸ்போர்ட் என்பது சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்வதை எளிதாக்குவதற்காக ஒன்றிய அரசால் வழங்கப்படும் ஒரு பயண ஆவணம் மட்டுமே. அதாவது ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பதால் மட்டுமே அவர் இந்திய குடிமகன் என்பதை அது சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தாது. இந்த விளக்கமே ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் இப்போது வரை நமது நாட்டில் இந்தியர் அல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது பாஸ்போர்ட் மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியாது என்பது ஒரு முரண்பாடாக உள்ளது. மேலும், ஒருவர் பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார் என்றால் அவர் அதன் உரிமையாளர் அல்ல. பாஸ்போர்ட்டின் பின்புற பக்கத்தில், இது “இந்திய அரசின் சொத்து” என்றும் அரசு உத்தரவிடும்போது, இதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற முக்கிய ஆவணங்களும் குடியுரிமைக்கான சான்றுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வழக்கின் விசாரணையின் போது, ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. அது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணம் மட்டுமே. இதேபோல், வாக்காளர் அடையாள அட்டையும் குடியுரிமை ஆவணமாக கருதப்படுவதில்லை.

இது, முதன்மையாக ஒரு நபரின் அடையாளம் மற்றும் வசிப்பிடத்தை நிரூபிக்கவும், தேர்தல்களில் தனது வாக்குரிமையை செலுத்தவும் மட்டுமே பயன்படுகிறது. இந்திய குடியுரிமை சட்டங்களின்படி, ஒரு நபர் பிறப்பால் இந்திய குடிமகனா என்பதை தீர்மானிக்க சில அளவுகோல்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது ஜனவரி 26, 1950 அன்றோ அல்லது அதற்கு பிறகோ.. அதேநேரம் ஜூலை 1, 1987க்கு முன்பாக இந்தியாவில் பிறந்த ஒருவர் பிறப்பால் இந்திய குடிமகனாகக் கருதப்படுவார். ஜூலை 1987க்கு பிறகு பிறந்த ஒரு நபர், தனது பெற்றோரில் யாராவது ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே குடியுரிமை கோர முடியும். அதேநேரம் டிசம்பர் 3, 2004 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெற வேண்டுமெனில், அவர்களின் பெற்றோர் இந்தியர்களாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் சட்டவிரோதமாக குடியேறியவராக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் விதியாகும்.

 

Tags : Aadhaar ,Ministry of Foreign Affairs of the Union ,New Delhi ,Union Foreign Ministry ,India ,Seva ,Divas ,
× RELATED ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட...