×

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற புதிய கெடுபிடி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான விதிமுறைகளை ஒன்றிய அரசு திருத்தியமைத்துள்ளது. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவதற்கான விதிமுறைகளை 2011ம் ஆண்டில் ஒன்றிய அரசு வகுத்திருந்தது. தற்போது இந்த விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து புதிய விதிமுறைகளுடன் அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026ம் ஆண்டிற்கு முன்னதாகப் பதிவு செய்த அனைத்துச் சங்கங்களும், தாங்கள் எந்தெந்த மாநிலங்களில் செயல்படுகிறோம் மற்றும் நிதியின் நோக்கம் என்ன என்பதை ஒரு ஆண்டிற்குள் ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

புதிய விதிகளின்படி, மதக் கல்வி மற்றும் கலாசாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளின் போது ‘மதமாற்றம்’ செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்திய வம்சாவளியைச் சேராத வெளிநாட்டினர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் இருக்க அனுமதி இல்லை; அதேபோல், நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு விவரங்களையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு நிதியைப் பெற்ற நிறுவனங்கள், அதன் பயன்பாடு குறித்து கள ஆய்வு செய்யத் தனிக்குழு அமைக்கப்படும்.

நிதிப் பயன்பாட்டில் 75 சதவீதம் செலவு செய்த பிறகே அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படும். செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களை வெளியிடும் அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது நிர்வாகிகள் எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் குறித்த விவரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நிதியைத் தங்களது பணிகளுக்காகச் செலவு செய்த நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பதிவைப் புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Home Ministry ,New Delhi ,Union government ,
× RELATED 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சிறந்த...