சேலம், ஜூன் 23: சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கணேசன். டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா. இவர் வீட்டின் கீழ் பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் தையலகம் நடத்தி வருகிறார். நேற்று பகல் மல்லிகா, பேன்சி ஸ்டோரில் இருந்தார். அப்போது நைசாக படியேறி உள்ளே சென்ற நபர், 2வது தளத்தில் உள்ள மல்லிகாவின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்ற அந்த நபர், கத்தியால் வீட்டின் பீரோவை நெம்பி, உள்ளே இருந்த மூக்குத்தி, பிரேஸ்லெட் ஆகியவற்றை எடுத்துகொண்டார். அந்நேரத்தில் வீட்டிற்கு வந்த மல்லிகா, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஜன்னல் வழியாக பார்த்தபோது, உள்ளே வாலிபர் ஒருவர் இருப்பது கண்டு சத்தம் போட்டார். அந்த நபர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்ததும், கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் தப்பி ஓடிய அவரை பொதுமக்கள் உதவியுடன் சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அம்மாபேட்டை சிலோன்காலனியை சேர்ந்த நாகராஜ் (24) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் திருடிய நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
