×

தமிழகத்தில் இருக்கும் போக்சோ நீதிமன்றங்கள் எத்தனை..? இன்னும் எவ்வளவு தேவைப்படும்.! அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழகத்தில் தற்போது போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் எத்தனை உள்ளன.! இன்னும் எத்தனை நீதிமன்றங்கள் தேவைப்படும் மற்றும் போக்சோ நீதிமன்றங்களின் செயல்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் போலீசாரால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை மற்றும் வழக்கு தேக்கத்தைக் குறைக்க மேலும் எத்தனை நீதிமன்றங்கள் தேவை என்பது குறித்து தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் தனித்தனியே விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் போது “குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தீவிரமாக கருதுகிறது; விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளோம்” என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதால், தற்போதைய துல்லியமான எண்ணிக்கையை உறுதி செய்யவே போக்சோ நீதிமன்றங்களின் எண்ணிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Tamil Nadu ,High Court ,Chennai ,Madras High Court ,Tiruvannamalai… ,
× RELATED தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை...