×

சுய உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நச் உண்மைகள்!

நன்றி குங்குமம் தோழி

கடந்த இருபது வருடங்களில் உடல் எடை குறைப்பில் அதிக ஆர்வம் காட்டுவது பெண்கள்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால்தான் எடை குறைப்பு விஷயத்தில் பெண்களை சுற்றி இத்தனை பெரிய ஏமாற்று மோசடி வணிகம் விரிந்து பரவியிருக்கிறது. இதற்கு உதாரணமாக, பிரியாணி மட்டும் சாப்பிட்டு உடல் எடை குறைப்பது தொடங்கி, 21 நாட்களில் 20 கிலோ எடை குறைப்பது வரை நீண்ட நெடும் பட்டியலை போடலாம்.

கூடவே, நம்மில் பலரும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை வீண் செய்வதால்தான் முழுமையாக எடை குறைக்க முடியாமல் போவதையும், அவற்றால் உடல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் வருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்நிலையில் உடல் எடை குறைப்பு சார்ந்த போதிய விழிப்புணர்வு என்பது முன்பைக் காட்டிலும் இப்போது மிக அவசியமாகிறது. அதனை கருத்தில் கொண்டே இந்தக் கட்டுரை.

எடை குறைப்பு நிகழும் முறை…

20% வாழ்க்கை முறை மாற்றங்களிலும், 40% உணவு மற்றும் 40% உடற்பயிற்சிகளின் மூலமாகவும் எடை குறையும். எந்த இடத்திலுள்ள கொழுப்பினை கரைக்க வேண்டும் என்பதனை மூளை முடிவு செய்யும். வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு என்பது கெட்டியான கொழுப்பு, அது கடைசியாகவே கறையும். இதற்கு நாம் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து கொண்டே வரவேண்டும்.

உடற்பயிற்சிகளில் செய்யும் தவறுகள்…

* அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் எடை குறையும் என நினைப்பது.

* நடைப்பயிற்சி மட்டுமே செய்து உடல் எடை குறைக்க எண்ணுவது.

* போதிய தசைத் திறன் இல்லாமல் அதீத சிரமம் இருக்கும் உடற் பயிற்சிகளை செய்வதால் உடல் எடை குறையும் என நம்புவது.

* யூடியூப், தொலைக்காட்சி போன்ற காணொளியை பார்த்து உடற்பயிற்சி செய்வது.

* ட்ரெட்மில் (Treadmill), சைக்கிளிங்(Cycling) என ஒரே இடத்தில் இருந்து செய்யும் உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வதால் உடல் எடை குறையும் என நினைப்பது.

* வாரத்தில் ஒருமுறை மட்டும் ஜூம்பா போன்ற நடன வகை உடற்பயிற்சிகள் செய்தால் எடை குறையும் என எண்ணுவது.

உணவு முறையில் செய்யும் தவறுகள்…

* காலை உணவிற்கு வெறும் பழங்களை மட்டுமே எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என நினைப்பது.

* தொடர்ந்து அதிக நாட்கள் விரத முறையில் இருப்பது. நீண்ட நேர இடைவெளி விட்டு விரதம் முடிப்பது.

* புதுப்புது எடை குறைப்பு உணவு முறைகளுக்குப் பழகுவது. அவ்வப்போது அதனை மாற்றிக்கொண்டே இருப்பது.

* விதவிதமான உணவுகள், பானங்கள் என சந்தையில் விற்கும் அனைத்துப் பொருட்களையும் உடல் எடைக்காக பயன்படுத்துவது.

* உணவில் கொழுப்புச் சத்தினை குறைத்துக் கொண்டால் உடல் எடை குறைந்துவிடும் என நம்புவது.

* சாப்பிடாமல் இருந்தாலே உடல் எடை குறையும் என நினைப்பது.

பாதிப்புகள்…

தசை அடர்த்தி குறைவது, குறைந்த எடை மீண்டும் சில மாதங்களிலேயே அதிகரிப்பது, தசை காயங்கள் ஏற்படுவது, எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது, எளிதில் சோர்வாக உணர்வது, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது, சருமம் உறுதியாக இல்லாமல் இருப்பது, புரதப்பொடி (‘Protein Powder’) என பல புதிய உணவுகள் நம் உடலுக்குத் தேவையா என தெரியாமலேயே அதிகம் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் செயலிழந்து போவது எனப் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

இவை அனைத்தும் முறையாக இயன்முறை மருத்துவம், உணவியல் மருத்துவம், பொது மருத்துவம் என மூன்று துறைகளிலும் அணுகாமல் சுயமாக வீட்டில் செய்பவர்களுக்கே நிகழ்கிறது.

‘நச்’ உண்மைகள்…

* உடல் எடை குறைப்பு என்பது ஒரு நீண்ட கால திட்டமாகும். இந்த விஷயத்தில் ‘அவசரம் அழிவைத் தரும்.’

* உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூன்றுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

* வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கடைசியில்தான் கரையும். இதற்கு பல மாதங்கள் ஆகும். இயற்கையாகவே பெண்களுக்கு கொழுப்புச் சத்து குறைய தாமதம் ஆகும் என ஆய்வுகள் சொல்கிறது.

* உடல் எடை குறைப்பு சார்ந்து வரும் பொருட்கள் அதாவது, பானங்கள், கை கடிகாரம், உணவு முறை பழக்கங்கள் எல்லாமே நம்மை மயக்கும் வணிக நோக்கமாகும்.

* தூக்கம் மற்றும் மற்ற வாழ்க்கை முறைகள் அனைத்தும் நேரடியாக உடல் எடை அதிகரிப்பதில் பங்கு கொள்கிறது என்பதால், வாழ்க்கை முறை மாற்றங்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

உடல் எடை குறைக்க வேண்டும் என முடிவு செய்தால் அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை முதலில் அணுகி தேவையான தசை பரிசோதனைகள், உடல் பரிசோதனைகள் அனைத்தையும் செய்துகொள்ள வேண்டும். பிறகு தன் தசைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, தொழிலுக்கு ஏற்ப என அனைத்தையும் சேர்த்து உடல் எடை குறைப்பதற்கான பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுத் தருவர்.

இதனை இயன்முறை மருத்துவ மையத்திலோ அல்லது இயன்முறை மருத்துவர் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திலோ அல்லது கற்றுக்கொண்டு வீட்டிலேயோ செய்து கொள்ளலாம். ஆன்லைன் வழியாகவும் இயன்முறை மருத்துவரை தொடர்பு கொண்டு உடற்பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம். கூடவே, பொது மருத்துவரையும், உணவு சார்ந்த நிபுணரையும் ஒருமுறை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வதும் அவசியம்.

நன்மைகள்…

முறையாக நிபுணர்களின் உதவியுடன் எடை குறைப்பு செய்தால் விளையும் நன்மைகள் இவை…

*தசைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

*முறையான உடல் எடை குறைப்பு நிகழ்வதால் மீண்டும் உடல் எடை அதிகரிக்காது.

*நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.

*ஊட்டச்சத்துக்களில் குறைபாடு ஏற்படாது.

*உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை, வாழ்க்கை முறை மூன்றையும் கலந்து செய்வதினால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

*வேறு எந்த உறுப்பு சார்ந்த சிக்கல்களும் வராது.

இங்கே ஒரு உதாரணத்துடன் கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன். வீட்டிலிருந்தே நிபுணர்களின் உதவி இல்லாமல் எடை குறைக்க எண்ணி தோழி ஒருவர் உடற்பயிற்சிகள் செய்யாமல், காய்கள், சூப் என அறைகுறையான உணவு மட்டுமே உண்டு எடை குறைத்தார். ஆனால், உடற்பயிற்சிகள் செய்யாமல் அவரது சருமம் மற்றும் தசைகள் உறுதியாக இல்லாமல் மிகவும் தொலதொலவென ஆயிற்று.

எனவே, நாம் உணவுக்காகவும், உடைக்காகவும், வேறு பல கேளிக்கை விஷயங்களுக்காகவும் செலவு செய்யும் பணத்திலிருந்து குறைந்தபட்சம் கால் பங்கினை எடுத்து நம் ஆரோக்கியத்திற்காக செலவு செய்தாலே போதுமானது, சரியான வழியில் முழுமையாக உடல் எடையை குறைக்க முடியும்.

தொகுப்பு: கோமதி இசைக்கர்

Tags :
× RELATED சிறுநீரகத்தின் ‘வடிகட்டி வீக்கம்’ (Glomerulonephritis):