×

தினையின் தீராத நற்பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுதானியங்களில் மிகவும் பழமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த தானியம் தினை. இது பாரம்பரிய உணவோடு மிக நெருங்கிய தொடர்புடையது.தினையின் வகைகள் உலக அளவில் பல வண்ணங்களில் தினை விளைவிக்கப்பட்டாலும் முக்கியமாக நான்கு வகைகள் அறியப்படுகின்றன.

மஞ்சள் தினை – இதுவே நம் சந்தைகளில் மிகவும் பரவலாக கிடைக்கும்.

பொதுவான தினை வகைகள்

வெள்ளை தினை குறைந்த அளவில் பயிரிடப்படும் வெளிறிய நிறமுடைய தினை.
சிவப்பு தினை – ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மிக அதிகமாக கொண்ட ஒரு வகை தினையாகும்.
கருப்பு தினை – இது அரிதாக விளையக்கூடிய சத்துகள் அதிகம் கொண்ட தினையாகும்.

ஊட்டச்சத்து மதிப்புகள்

ஆற்றல் – 351 kcal, கால்சியம் – 31 மி.கி.
கார்போஹைட்ரேட் – 63.2 கிராம், இரும்புச்சத்து – 2.8. மி.கி.
புரதச்சத்து – 11.2 கிராம், தையமின்
நார்ச்சத்து – 6.7 கிராம், வைட்டமின் பி1 – 0.59 மி.கி.
தினையை சமைப்பதற்கு முன்பு குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதிலுள்ள சத்துக்களை நம் உடல் எளிதில் உறிஞ்ச வழிவகை செய்யும்.

தினையின் சமையல் பயன்பாடுகள்

தினை இட்லி, பொங்கல், தினை சாதம், பிரியாணி, தினை மாவு, கொழுக்கட்டை, லட்டு போன்ற சத்தான தின்பண்டங்களைச் செய்யலாம் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பாரம்பரியமாக தினை மாவுடன் தேன் கலந்து சாப்பிடும் வழக்கம் உண்டு)

ஆரோக்கிய நன்மைகள்

நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் – தினையில் வைட்டமின் பி1, தையமின் மிக அதிகம். இது நரம்புகளுக்கு பயம் அளித்து, கை கால் நடுக்கம், மறதி நோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கின்றது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு – குறைந்த கிளைசமிக் குறியீடு காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுத்து சீராக வைக்கிறது.இதய ஆரோக்கியம் – தினையில் உள்ள லெசித்தின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (எல்டிஎல்) குறைத்து, இதய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது.

எலும்புகள் வலுவடையும் – இதில் உள்ள கால்சியம், சத்து 30 வயதைக் கடக்கும் பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து எலும்புகளை உறுதியாக்குகிறது.
சமீபத்திய உலகளாவிய மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிகளின் படி, தினை அரிசியில் உள்ள தனித்துவமான வேதிப்பொருட்கள் மனித ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி புதிய உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பிசிஓஎஸ் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்திறன்

சமீபத்திய கருவுறுதல் சார்ந்த ஆய்வுகளின்படி பிசிஓஎஸ் (சினைப்பை நீர்க்கட்டி) பிரச்னை உள்ள பெண்களுக்கு தினை ஒரு அருமருந்தாகக் கண்டறியப்பட்டுள்ளது. தினையில் உள்ள அதிகப்படியான புரதம் (12.3 கிராம்) மற்றும் நார்ச்சத்து (8 கிராம்), இன்சுலின் ஹார்மோனை சீராகச் செய்து, ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்கிறது.
இது உடல் எடையைக் குறைப்பதோடு, கருமுட்டை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது.

காபா மற்றும் மன அமைதி (நரம்பியல் சார்ந்த பிரச்னைகள்)

தினையில் காபா (Gama Aminobutyric Acid) என்ற முக்கியமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் மற்றும் வைட்டமின் பி12 இருப்பது சமீபத்திய நரம்பியல் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூளைச் செல்களைப் பாதுகாத்து, பதற்றம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றைக் குறைக்கிறது. பிரசவத்திற்குத் திட்டமிடும் பெண்களுக்கு மன அமைதி மிக முக்கியம் என்பதால் தினை அதற்கு பெரிதும் உதவுகிறது.

குடல் ஆரோக்கியம் மற்றும் பிரீபயோடிக் பண்புகள்

2025 -2026 ஆய்வுகளின்படி தினையில் உள்ள ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்துகள் குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு பிரீபயோடிக் உணவாகச் செய்யப்படுகின்றன. இது குடல் ஆரோக்கியத்துத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புசச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மலம் கழிப்பதை சீராக்குகிறது.

கெட்ட கொழுப்பைத் தடுக்கும் அமினோ அமிலங்கள்

தினையில் உள்ள லெசித்தின்(lecithin) மற்றும் மெத்தியோனைன்(methionine) போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள், கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து, உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.

புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆன்டி – ஏஜிங் பண்புகள்

தினை அரிசியில் உள்ள பினாலிக் அமிலங்கள் மற்றும் பிளவனாய்டுகள் மிகச் சிறந்த ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகளாகச் செயல்படுகின்றன. இவை, உடலில் உள்ள செல்கள் முதிர்ச்சியடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைப்பதுடன், மார்பகப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் உருவாவதைக் தடுக்கிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பக்காலத் திட்டமிடலுக்கு ஏன் தினை சிறந்தது?

ஆய்வுகளின்படி, தினை அரிசியில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையைத் தடுக்கிறது. தினையில் உள்ள போலேட் குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கர்ப்பகால சர்க்கரைநோய் வராமல் தடுக்கும் கேடயமாக உடலைப் பாதுகாக்கிறது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தினையில் செய்யப்படும் உணவுகளை சமைத்து சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த பலனைத் தரும்.

தொகுப்பு:- உணவியல் நிபுனர் சங்கீதா

 


Tags : Dr. ,Stardust ,
× RELATED சுய உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நச் உண்மைகள்!