×

ஆளுநர் உரையில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன்?: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

சென்னை: சட்டமன்றத்தில் இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் பேசுகையில், டெல்லியில் முதலமைச்சர் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று குறிப்பிட்டதற்கு காரணமாக இருந்தது தி.மு.க அரசு தான். தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். ஆனால் நேற்று நடைபெற்ற ஆளுநர் உரையில் இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக பேசினார். அவை முன்னவர் செங்கோட்டையன்: தேசிய கீதம் இரண்டு முறை ஒலிக்கப்பட்டது என்று கூறுகிறார். அது எந்த தவறும் இல்லை. அது வரவேற்கத்தக்கது.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: ஆளுநரோடு இணக்கமாக இருக்க என்பது படிப்படியாக எந்த எந்த அரசாங்கம், அது கொள்கை அடிப்படையாக வைத்துதான். மாநிலங்கள் செயல்படுகிறது.
எதை எப்படி அணுக வேண்டும் என்று அணுகுமுறையை இறைவன் எங்களுக்கு கொடுத்து இருக்கிறார். மிக சரியான முறையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: அண்ணா உருவாக்கிய மாநிலக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவோம். இடைக்காலத்தில் தான் வந்தே மாதரம் பிரச்சனை வந்துள்ளது. பதவியேற்பு விழாவுக்கு முன்பே தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசு நிகழ்ச்சிகளிலும் பாட வேண்டும் என்றோம். எங்களின் கருத்துகளை ஆளுநரிடம் உறுதியாக இருந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்த நிலையில் நேற்று தமிழ்நாடு ஆளுநர் முழு உரையை வாசித்தார். மாநிலக் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்போம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநரை முழுவதுமாக அவையில் நேற்று அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: ஒருமுறை இருமுறை என்பதை தீர்மானிக்க வேண்டியது நான் தான். அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். நடப்பது எல்லாம் நல்லதாகவே நடந்துள்ளது. இனியும் நல்லதே நடக்கும்.

எ.வ.வேலு (தி.மு.க): தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடியதை வரவேற்கிறோம். ஆனால் இறுதியாக பாட வேண்டிய நாட்டுப்பண் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு ஏன் பாடப்பட்டது. இருமுறையாக மாற்றி விட்டீர்கள். இனி 3 முறை, 4 முறையாக மாற்ற சொல்வார்கள்.

சிவசங்கர்(தி.மு.க): சிங்கப்பெண் படை புதிய திட்டம் இல்லை. யூனிபார்ம் மற்றும் மாற்றி இருக்கிறார்கள்.
இயக்குனர் அட்லி பல சிறந்த படங்களின் காட்சிகளை எடுத்து படம் எடுப்பார். அதுபோல எங்கள் ஆட்சியை திட்டங்களை எடுத்து ஆட்சி நடத்துகிறார்கள்.

அமைச்சர் ராஜ்மோகன்: தமிழ் திரையுலகில் இருந்து திரைப்படங்களை விடுத்து மக்கள் பணிக்காக அரசியல் வந்துள்ளவர் முதலமைச்சர். ஆனால் அரசியலிலே இருந்த சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் அட்லி குறித்து பேசும்போதெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. விதண்டாவாதமாக சில விஷயங்களை குறித்து வம்புக்காக பேசுவது என்பது எப்படி சரியாக இருக்கும். இந்த சட்டமன்றத்தை பாருங்கள் காலங்கள் மாறிவிட்டது காட்சி மாறிவிட்டது. அன்றும் இன்றும் என்றும் மக்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாநில உரிமை, தமிழ் மொழி, எங்கள் உயிருக்கும் மேல் தமிழ் எங்கள் மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. என்றும் அதையே பின்பற்றுவோம்.

சிவசங்கர் (தி.மு.க): ஆக்கப்பூர்வமாக ஆட்சி தர என்ன பணியோ அதை பாருங்கள். பொதுக்கூட்ட மேடையில் பேசியவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் உள்ளோம். எங்களுடன் சேர்ந்து கூட்டணியில் வெற்றிபெற்றவர்களுடன் தான் கைகோர்த்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். வருங்காலத்தில் தனியாக நின்று வாக்குகளைப் பெற நீங்கள் தயாரா? இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Legislative Assembly ,Chennai ,Legislative ,Assembly ,DMK ,MLA ,Sivashankar ,DMK government ,Chief Minister ,Delhi ,Tamil Nadu ,India.… ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும்...