பள்ளிப்பட்டு, ஜூன் 19: பள்ளிப்பட்டு அருகே சுராஜ்பட்டை ஊராட்சியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து வீடுகள் மற்றும் விளைநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், சுராஜ்பட்டை கிராமம் மற்றும் அங்குள்ள காலனியில் குறைந்த அழுத்த மின் வினியோகம் ஏற்படுவதால், மின்சாதன பொருட்கள் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. மேலும், விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கிராமத்தில் நிலவும் குறைந்த அழுத்த மின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வீடுகளுக்கு தனியாக மின் விநியோகம் வழங்கும் வகையில் தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் பாதிப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
