- உச்ச நீதிமன்றம்
- ஜார்கண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- தில்லி
- ஜார்க்கண்ட்
- தலைமை நீதிபதி
- சூர்யகாந்த்
- நீதிபதி
- வி. மோஹனா...
டெல்லி: ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை சூழல் மண்டலங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி , நாடு முழுவதும் உள்ள காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஜார்க்கண்ட் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (JSPCB) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த போது இந்த கருத்துக்களை கூறியது. JSPCB-க்காக ஆஜரான வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கூறியதாவது,
நம் இயற்கைச் சூழல் மண்டலத்தை உண்மையாகவே பாதுகாக்க கூடிய மாநிலங்கள் சிலவே உள்ளன; அவற்றில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று என்றார். நாடு முழுவதும் உள்ள காடுகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயம். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் இன்னும் மதிப்புமிக்க இயற்கை சூழல் அமைப்புகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும் கொண்டுள்ளன; எனவே அவற்றுக்குச் சிறப்புப் பாதுகாப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளிலிருந்து கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளை அமைப்பதற்கான குறைந்தபட்ச தொலைவை 400-500 மீட்டரிலிருந்து 250 மீட்டராகக் குறைத்து அரசாணை வெளியிட்டது. JSPCB-யின் இந்த அறிவிப்புக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த போது மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் கல் குவாரிகள் அல்லது கல் உடைக்கும் ஆலைகளுக்கு (stone crushers) அனுமதி வழங்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தது. பின் கடந்த ஏப்ரல் மாதம்கல் குவாரிகளுக்கு 500 மீட்டரும், கல் உடைக்கும் ஆலைகளுக்கு 400 மீட்டரும் என மாநில உயர்நீதிமன்றம் எல்லைக் கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்தது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கு விசாரணையின் போதே உச்சநீதிமன்றம் சில மாநிலங்கள் இன்றும் செழுமையான இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை நிலப்பரப்புகளை இன்னும் தக்க வைத்துள்ளன என்றும், எனவே அவற்றைப் பாதுகாப்பது முன்னுரிமைக்குரியது என்றும் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
