×

உலக கோப்பை கால்பந்து தொடர்; பராகுவேவை பந்தாடிய அமெரிக்கா: 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

 

கலிபோர்னியா: 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் -2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.டி பிரிவில் இடம்பெற்றுள்ள போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் மைதானத்தில் இன்று காலை பராகுவே அணியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய நிலையில், 7வது நிமிடத்தில் பராகுவே வீரர் மிட்பீல்டர் டாமியன் பொபாடிலா ‘ஓன் கோல்’ அடிக்க, அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து அமெரிக்க நட்சத்திர வீரர் ஃபோலாரின் பலோகன் ஆட்டத்தின் 31வது மற்றும் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+5’) அடுத்தடுத்து2 அற்புதமான கோல்களை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியிலேயே அமெரிக்கா 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.

2வது பாதியில், 73வது நிமிடத்தில் பராகுவேவின் மொரிசியோ ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கணக்கைத் தொடங்கினார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் (90+7’), மாற்று வீரராக களம் புகுந்த ஜியோவானி ரேனா அமெரிக்காவுக்கான 4-வது கோலை அடித்தார். முடிவில் 4-1 என்ற கணக்கில் அமெரிக்கா வரலாற்று வெற்றியை பெற்றது. 3 புள்ளிகளை பெற்ற அமெரிக்க அணி தனது அடுத்த லீக் போட்டியில் 19ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

கனடா-போஸ்னியா போட்டி டிரா
முன்னதாக நள்ளிரவு நடந்த “குரூப் பி” பிரிவு லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் போஸ்னியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் போஸ்னியா வீரர் ஜோவோ லுகி கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி முடிவில் போஸ்னியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து 2வது பாதியில் கனடா வீரர் செலி லரின் கோல் அடித்து சமநிலை ஏற்படுத்தினார். இதையடுத்து இரு அணிகளும் வெற்றிக்கான கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும் கூடுதல் கோல் எதுவும் பதிவாகவில்லை. இதனால் ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் கனடா மற்றும் போஸ்னியா அணிகளுக்கு, தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Tags : World Cup football series ,USA ,Paraguay ,California ,23rd World Cup football series ,Mexico ,Canada ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!