×

வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஈரான் போர் முடிவுக்கு வருகிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டிவருகிறது. கடந்த 3 நாட்களாக ஈரான் மீது அமெரிக்க படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவை கைப்பற்றுவதாகவும், ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவதாகவும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு பின், அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த தாக்குதல் திட்டங்களை திடீரென அவர் ரத்து செய்தார். ஈரான் மீதான அடுத்தகட்ட தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தி வைப்பதாக தனது சமூக வலைதளத்தில் அவர் அறிவித்தார். அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதி திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் எதிரொலியாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கவும், சிவில் அணுசக்தி மேம்பாட்டிற்கு உதவி வழங்கவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சமீபத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா,பஹ்ரைன் , குவைத் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் உடன் பேசப்பட்டுள்ளது. நீங்கள் கேள்வி பட்டீர்களா என்று தெரியவில்லை.

ஆனால் நாங்கள் ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். அணு ஆயுதத்தை ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது என்ற எங்கள் நிபந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.அதுதான் ஒட்டுமொத்த நோக்கமாகவும் இருந்தது. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும். இது மிகவும் வலுவான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இது சற்று கொள்கை அளவிலானதாக தோன்றினாலும் இது நிச்சயம் நிறைவேற்றப்படவுள்ளது. அணு ஆயுதத்தை பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் நிரந்தரமாக கைவிடுவதாக ஈரான் உறுதியளித்துள்ளது. அவர்கள் அணு ஆயுதத்தை வாங்கவோ அல்லது எந்த வகையிலும் அதனை உருவாக்கவோ மாட்டார்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது\\” என்றார்.

Tags : Iran ,US ,President ,Trump ,Washington ,United States ,Kark ,
× RELATED ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக்...