* உத்தரப் பிரதேசத்திற்கு 80 தொகுதியில் இருந்து 120 ஆக உயரும்
டெல்லி: மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 824 ஆக உயர்த்துவது குறித்து பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளது. நாட்டின் மக்களவைத் தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக தொகுதி மறுவரையறை செய்வது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543 என்பதலிருந்து 850 ஆக உயர்த்தவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுசீரமைக்கவும் கொண்டுவரப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’ மக்களவை வாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக, 2023ல் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டுச் சட்டத்தை 2029 பொதுத்தேர்தலில் உடனடியாக அமல்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்திலும் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் புதிய மறுவரையறையால் குறையும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின்படி நடப்பு ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியான பிறகே நாடு தழுவிய தொகுதி மறுவரையறைப் பணிகள் சட்டப்பூர்வமாகத் தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதுள்ள 543 தொகுதிகளில், சராசரியாக ஒரு தொகுதிக்கு 18.2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக சில பெருநகர தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்துள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் தேர்தல் பங்கேற்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவித்தன. இதனடிப்படையில், தேர்தல் முறையை சீரமைக்க பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ‘இந்திய மக்களவையில் தொகுதிகளின் அளவு, அமைப்பு மற்றும் மறுவரையறைக்கான அவசியம் (2009 – 2024)’ என்ற தலைப்பில் விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பரிந்துரையின்படி, மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கையை 543 என்பதலிருந்து 824 ஆக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அதிக வாக்காளர்களின் எண்ணிக்கை கொண்ட 170 தொகுதிகளை மட்டும் குறிவைத்து பிரிக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதில் 59 தொகுதிகளை இரண்டாகவும், 111 தொகுதிகளை மூன்றாகவும் பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் பலத்தில் பெரிய மாற்றம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.7 சதவீதத்திலிருந்து 23.6 சதவீதமாகவும், வட மற்றும் மேற்கு மாநிலங்களின் பங்கு 45.6 சதவீதத்திலிருந்து 45.2 சதவீதமாகவும் மிகச்சிறிய அளவிலேயே மாறுபடும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியான தொகுதி எண்ணிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் 80 ஆக உள்ள இடங்கள் 120 ஆகவும், தமிழ்நாட்டில் 39 ஆக உள்ள இடங்கள் 59 ஆகவும் அதிகரிக்கப்படும். மகாராஷ்டிராவில் 72, பீகாரில் 60, மத்தியப் பிரதேசத்தில் 44, கர்நாடகாவில் 42, குஜராத்தில் 39, ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் தலா 38, கேரளாவில் 30 இடங்களாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மிசோரம், சிக்கிம், புதுச்சேரி மற்றும் லடாக் போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இடங்களை இரண்டு மடங்காக உயர்த்தவும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
மேலும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரத்யேக வாக்குச் சாவடிகள் மற்றும் பெருநகரங்களில் வாக்குப்பதிவு நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்கும்பட்சத்தில், வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
