சென்னை: தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடி நிகழ்ச்சிகள் துவங்குவதை உறுதி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த மே 10, 2026 அன்று நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்ற நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் அரசு நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் மரபு பின்பற்றப்பட்டு வருவதாகவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வந்தே மாதரம் தொடர்பான சுற்றறிக்கையை ரத்து செய்து, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, “மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து 2 மாதங்களுக்குள் (8 வாரங்களுக்குள்) தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
