×

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

 

டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இன்று காலை 10 மணிக்கு முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். தொடர்ந்து துணை ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இன்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்கிறார். இந்த கூட்டம், நாளை காலை மற்றும் பிற்பகல் என்று இரண்டு பிரிவாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் இரவு உணவில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். பின்னர், பிரதமர் மோடி, அனைத்து முதல்-மந்திரிகளுடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதோடு நிதி ஆயோக் கூட்டம் நிறைவு பெறும். நாளை இரவும் முதல்வர் விஜய் டெல்லியில் தங்குகிறார்.

12ம் தேதி (நாளை மறுதினம்) காலையில் மத்திய மந்திரிகள் சிலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த முறை டெல்லி சென்றபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா, விஜயை சந்திக்க வில்லை. இதனால் இந்த முறை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அன்று பிற்பகல் 3 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் முதல்வர் விஜய் மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைவார்.

Tags : Vijay ,President of the Republic ,Drawpati Murmu ,Delhi ,President ,Thraupati Murmuh ,Niti Aayog ,Narendra Modi ,
× RELATED தொடர்ந்து 4399 நாட்கள் பிரதமர்.! நேருவின் சாதனையை முறியடித்த மோடி…