×

சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்!.. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் பலி

 

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ மாகாணத்தில் உள்ள டாவோ ஓரியண்டல் கடலோரப் பகுதியில் இன்று காலை 7:37 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் முதலில் 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து மேடான பகுதிகளுக்குத் தப்பி ஓடினர்.

குறிப்பாக டாவோ நகரில் உள்ள வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கடுமையாகக் குலுங்கின. தற்போதைய நிலவரப்படி, நிலநடுக்கம் காரணமாக வீடுகள், பாலங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நிலநடுக்கத்தால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், சுனாமி அச்சுறுத்தல் தற்போது நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரக்கால மீட்பு முகமைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் ஆய்வு நடத்தி வருகின்றன. சேத விவரங்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறினர்.

Tags : MANILA ,MINTANAO ,PHILIPPINES ,MINTANAO, PHILIPPINES ,
× RELATED ஓட்டுநர்கள், நடத்துநர்கள்...