×

அவசர சட்டம் பிறப்பிப்பு; அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வரி விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு

 

டெல்லி: இந்தியாவில் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வரி விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசுப் பத்திரங்கள் மூலம் அதிகளவு முதலீடு செய்கிறார்கள். இதற்கு, ஒன்றிய அரசு 2 விதமான வரியை விதிக்கிறது. இந்தநிலையில், அந்த வரிகள் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருமான வரி திருத்த அவசரச் சட்டம்-2026 நேற்று கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அரசுப் பத்திரங்கள் (ஜி-செக்ஸ்) மூலம் ஈட்டப்படும் வட்டி வருமானத்தின் மீது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மேலும், இந்த அவசரச் சட்டம் அந்த பத்திரங்களின் விற்பனை அல்லது பரிமாற்றத்தின் மீதான மூலதன ஆதாய வரியையும் நீக்குகிறது. இந்த வரி விலக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதியை கணக்கீட்டு அமல்படுத்தப்படும். அதாவது, ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களுக்கு இந்த வரி விலக்கு அளிக்கப்படும். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிகையில்,‘ உலகளாவிய முன்னணி முதலீட்டு மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும், மூலதனச் சந்தையை அதிகப்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் தனிநபர்கள், வெளிநாட்டுப் பங்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை எளிதாக்குவதையும், நிலையான நீண்டகால வெளிநாட்டு மூலதன வரவை ஈர்ப்பதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி அரசுப் பத்திரங்கள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரி 12.5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தின் மீதான பிடித்த வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் விகிதம் 20 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,EU government ,India ,Indian ,
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும்...