சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயமடைந்த நபருக்கு தூய்மை பணியாளர் ஒருவர் முதலுதவி அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
அதில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவது அவசியம். மருத்துவர் படிப்பு அல்லது செவிலியர் பயிற்சி பெறாதா தூய்மை பணியாளர்களை எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவோ, ஊசி போடவோ கூடாது. தகுதியற்ற நபர்கள் சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். மற்றும் நோயளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்துகொண்டு பணிக்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்துவதும், பணிக்கு வராமால் தூய்மை பணியாளர்களை முதலுதவி செய்ய வழிகாட்டுவதும் தவறானது. நோயாளிகள் தரப்பில் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறைசார் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கூறப்பட்டுள்ளது. நோயாளிகள் இது தொடர்பான புகாரளிக்க 104 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
