நியூயார்க்: அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் ஈரான் மீது இன்று அதிகாலை அமெரிக்கா புதிய வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில் ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில், அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை புதிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரானிய ஊடகங்கள் கூறுகையில், ‘பந்தர் அப்பாஸ் நகரின் கிழக்கே அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், அதை தொடர்ந்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சில நிமிடங்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த 4 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ‘கடந்த 48 மணி நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் 2வது தாக்குதல் இதுவாகும். ஒருபுறம் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் கூறுகையில், பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு மையம் ஒன்றிலிருந்து அமெரிக்க படைகளை நோக்கி டிரோன் ஏவப்பட தயாராக இருந்ததாகவும், அதை முறியடிக்கும் வகையில் இந்த தற்காப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்கா மீறியுள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு மத்தியிலும், வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசும்போது, ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அப்போது, ‘ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மிகவும் விரும்புகிறது. ஆனால் அவர்கள் இன்னும் போதிய நிபந்தனைகளை முன்வைக்கவில்லை. நமக்கு திருப்தி இல்லை. அவர்கள் ஒப்பந்தத்துக்கு வர வேண்டும், இல்லையெனில் நாங்கள் தொடங்கிய வேலையை முழுமையாக முடிப்போம்’ என்றார்.
ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடாவிட்டாலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாக திறந்துவிடாவிட்டாலோ மீண்டும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்பதை டிரம்ப் தெளிவாக உணர்த்தினார். இதேவேளையில் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் இரு நாட்டு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பது, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழித்தல் அல்லது சர்வதேச கண்காணிப்புக்கு ஒப்படைத்தல், அமெரிக்காவால் முடக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை விடுவித்தல் போன்ற 3 முக்கிய அம்சங்கள், விவாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ‘அமைதி ஒப்பந்தத்துக்கு மிக அருகிலும், அதேசமயம் மிக தூரத்திலும் இருக்கிறோம்’ என்று தெரிவித்து உள்ளது.
உலகின் மிக முக்கியமான எரிபொருள் போக்குவரத்து வழியான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால் ஏற்கனவே பதற்றத்தில் உள்ள உலக பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படலாம். இந்த அடுத்தடுத்த தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுமா அல்லது மீண்டும் முழுமையான போர் மூளுமா என்பது தோஹா பேச்சுவார்த்தையின் இறுதி முடிவை பொறுத்தே அமையும். தற்போதைய நிலவரம் மிகவும் பதற்றமானதாகவே தொடர்கிறது.
