- Maduranthakam
- திண்டிவனம் நெடுஞ்சாலை
- மதுரந்தகம்-திண்டிவனம் நெடுஞ்சாலை
- மதுரந்தகம் நகராட்சி
- செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம்: மதுராந்தகம் – திண்டிவனம் நெடுஞ்சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பறிமுதல் வாகனங்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் போலீஸ் குடியிருப்பு அருகே மதுராந்தகம்-திண்டிவனம் நெடுஞ்சாலை உள்ளது. இதன் ஓரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதில் போலீஸ் குடியிருப்புவாசிகளை தவிர்த்து அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள், உணவுக்கழிவுகள் உள்ளிட்டவை அப்பகுதியில் பரவலாக கிடப்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பழைய சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் பராமரிப்பு இன்றி அங்கு நிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றைச் சுற்றியும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல கூட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் ஒரு பஸ் நிறுத்தமும் உள்ளதால் இங்கு தினமும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த குப்பை கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் துர்நாற்றம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும், போலீசார் பறிமுதல் வாகனங்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து சுகாதார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மதுராந்தகம் நகராட்சி ஆணையாளர் சுகேந்திரனிடம் கேட்டபோது, நீங்கள் சொல்லும் தகவல் உண்மை. அந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன். மேலும் பறிமுதல் வாகனங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
