×

சிறுகதை-தாய்மையின் எல்லை!

நன்றி குங்குமம் தோழி

‘அம்மாவூர்’ நகரமுமல்லாத, கிராமமும் அல்லாத வகையைச் சேர்ந்தது. சுமார் இரண்டாயிரம் குடும்பங்களும், எல்லா வகை மக்களையும் கொண்ட தமிழ்நாட்டின் அறியப்படாத பல ஊர்களில் ஒன்றான அது அன்று பரபரப்பானது.காரணம், அந்த ஊர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று காணாமல் போயிற்று. நர்ஸ் தடுப்பூசி போட வரும்போதுதான் தெரிந்தது. தாய் வள்ளி தூங்கிக் கொண்டிருந்தாள். எழுப்பி விஷயத்தை சொல்ல… அழ கூட திராணியற்று அதிர்ச்சியில் மருத்துவமனை வாசலில் தூணில் சாய்ந்து கிடந்தாள். செய்தி கேட்டு டாக்டர் விமலா வந்தார். வாட்ச்மேனை விரட்டினார்.

‘‘அப்ப எங்க போயிருந்தே?”

‘‘டீ குடிக்க… அதுவும் ஒரு அஞ்சு நிமிஷம் தாம்மா…” ‘‘யாராவது வித்தியாசமா பாத்தியா? குழந்தைய தூக்கிட்டு..?”‘‘இல்லம்மா…”வள்ளியிடம் வந்தார் டாக்டர். ‘‘எப்ப நீ பாத்த? குழந்தை இல்லன்னு?”‘‘நான் அரை மயக்கத்துல இருந்த போது, நர்ஸ்தான் சொன்னாங்க… சீக்கிரம் ஆள விட்டு தேட சொல்லுங்கம்மா…” ‘‘ஏன் உடனே சொல்லல…” நர்சிடம் கேட்டார் டாக்டர். ‘‘வந்து… நானே தேடிப் பார்த்தேன் டாக்டர்… எங்கேயும் காணல..!’’ நர்ஸ் கவலையோடு சொன்னாள்.விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்த டாக்டர் உடனே போலீசை தொடர்பு கொண்டாள்.

டாக்டர் விமலா, வள்ளியை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றார். ‘‘எம் புருஷனுக்கு என்ன பதில் சொல்லப் போறேனோ?’’ வள்ளி அழ ஆரம்பித்தாள்.சிறிது நேரத்தில், வாசலில் ஜீப் வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் ஆனந்த் கம்பீரமாக இறங்கி, உள்ளே வந்தார். டாக்டரிடம் நடந்தவற்றை கேட்டார். பிறகு வள்ளி பக்கம் திரும்பினார். ‘‘இந்த பாரும்மா… அழாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு… அத வச்சுதான் குழந்தைய தேடணும்! என்ன?’’

தலையாட்டினாள் வள்ளி.
‘‘குழந்தை எப்ப பொறந்தது?’’
“நேத்திக்கு…’’
‘‘ஆணா, பெண்ணா?’’
‘‘ஆம்பள சார்…’’‘‘சரி… உன் வார்டுல சந்தேகப்படற மாதிரி யாராவது நேத்திலேர்ந்து சுத்திக் கிட்டிருந்தாங்களா?’’
‘‘இல்லீங்க… நான் யாரையும் கவனிக்கல… உடம்பு சோர்வா இருந்ததுல படுத்துதான் இருந்தேன்…’’
‘‘சரி… எப்ப குழந்தைய காணும்?’’

இதற்கு நர்ஸ், ‘‘சார்… காலையில
தடுப்பூசி போடப் போனேன்… குழந்தையை காணோம் சார்…’’
வள்ளியோ குமுறி அழுதாள். ‘‘நான் பாவிங்க… கொஞ்சம் தூங்கிட்டேன்…’’ தொடர்ந்து புலம்பினாள்.அடுத்து வாட்ச்மேனை கூப்பிட்டார்.
‘‘ஏம்ப்பா… நீ சந்தேகப்படற மாதிரி யாரையாவது பாத்தியா?’’
‘‘இல்லீங்கையா…’’ பயத்தோடு சொன்னான் வாட்ச்மேன்.

‘‘யோவ்… இந்த திருட்டுல நீயும்
உடந்தைன்னு கண்டுபிடிச்சேன்.
கொன்னுடுவேன் ஜாக்கிரதை…’’
எச்சரித்து விட்டு வள்ளியிடம் மீண்டும் கேட்டார். ‘‘எங்கம்மா உன் புருஷன்?’’
‘‘அவரு தன் அம்மாவை கூட்டி வர வெளியூருக்கு போயிருக்காரு…’’
‘‘அவரு ஃபோன் நம்பர் சொல்லும்மா…’’

‘‘சரி… டாக்டர் நான் இப்பவே ட்ரேஸ் பண்ண ஆரம்பிக்கிறேன். இந்த ஒரு மணி நேரத்துல, குழந்தை பெருசா ரொம்ப தூரம் போயிருக்க வாய்ப்பில்லை… நீங்க ஏதாவது யூஸ்ஃபுல் தகவல் கிடைச்சா, எனக்கு சொல்லுங்க!” சொல்லிவிட்டு பரபரவென்று ஜீப்பில் ஏறினார்.
‘‘ஆஸ்பத்திரியில நல்லா தேடினீங்களா?” இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘‘தேடிட்டோம் சார்…’’
‘‘வண்டிய பஸ் ஸ்டாண்டுக்கு விடுப்பா…’’ டிரைவரிடம் அவசரப்படுத்தினார். அதற்குள் வள்ளியின் கணவரிடம் பேச அவன் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறினான்.
“கான்ஸ்டபிள்… போய் பக்கத்துல நல்லா விசாரிங்க…” துரிதப்படுத்தினார். ஆனந்த் தானும் ஒரு பெட்டிக் கடைக்கு சென்றார்.
கடைக்காரரிடம், “ஏம்ப்பா… இப்ப ஒரு மணி நேரத்துக்குள் ஒரு குழந்தையோட யாராவது பாத்தியா?’’
‘‘இல்லீங்க…”

‘‘இல்லியா… யோவ் நல்லா யோசிச்சு பாத்து சொல்லு. ஆஸ்பத்திரியில ஒரு குழந்தைய காணோம்யா…”‘‘அப்படி யாரையும் பாக்கல சார்…” பயத்துடன் சொன்னார். இன்ஸ்பெக்டர் ஆனந்த் அருகில் பூ விற்கும் பெண்ணிடம் சென்றார்.அவளும் அதே பதிலை கூறினாள். பிறகு செல் ரீசார்ஜ் கடை ஒன்றில் உள்ளே புகுந்தார். விஷயத்தை சொல்லி, ‘‘கடைசி ஒரு மணி நேரத்துல இங்க எவ்வளவு பஸ் வந்து போச்சு?” கேட்டார்.அங்கிருந்த இளைஞன்,‘‘மூணு பஸ்தான் வந்து போச்சு சார். ஒண்ணு சூலூர் பேட்டைக்கு, இன்னொன்று சென்னைக்கு, இன்னொன்று பக்கத்துல உள்ள கிளிமங்கலம்கிற கிராமத்துக்கு சார். மூணுமே கவர்மென்ட் பஸ் சார்!”

‘‘தேங்க்ஸ்…” வெளியே வந்தார். யோசித்தார். கிராமத்துக்கு குழந்தையை கடத்தியிருக்க வாய்ப்பில்லை. ஒன்று சென்னைக்கு இல்ல சூலூர் பேட்டைக்குதான் குழந்தை சென்றிருக்க வேண்டும்.
உடனே பக்கத்திலுள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போவை தொடர்பு கொண்டார். அவர் கேட்டதற்கு தகுந்த பதில் கிடைத்தது.‘‘சார்… சூலூர்பேட்டை போற பஸ் எங்க டிப்போ பஸ்தான். அந்த டிரைவர், கண்டக்டர் ஃபோன் நம்பர சொல்றோம்” என்று எண்களை சொன்னார். பிறகு சென்னை பஸ் விஷயத்தை, இன்னொரு நம்பர் கொடுத்து விசாரிக்க சொன்னார்கள். ஆனந்த் உடனே கண்டக்டரை தொடர்பு கொண்டார். ‘‘மிஸ்டர் வண்டிய ஓரமா நிறுத்தி, பஸ் உள்ள குழந்தையோட யாராவது இருக்காங்களான்னு பாத்து சொல்லு… நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்.’’ ‘‘சரி சார்…” பதறிய கண்டக்டர், ஒரே நிமிடத்தில் பேசினார்.

‘‘சார் நீங்க சொன்ன மாதிரி யாரும் இல்ல சார்…”
‘‘வாட்… இல்லையா… சரி, அம்மாவூர்ல யாராவது அது மாதிரி ஏறி
நடுவுல இறங்கினாங்களா? யோசிச்சு சொல்லுப்பா!”
‘‘இல்ல சார். எந்தக் குழந்தையும் இந்த ட்ரிப்ல ஏறல…”

‘‘சரி… ஃபோன் ஆஃப் பண்ணி வைக்காத… மறுபடியும் பேசுவேன்.’’ லைனை கட் செய்தார் இன்ஸ்பெக்டர். கொஞ்சம் கவலையானார். கடைசி வாய்ப்பாக சென்னை அரசு போக்குவரத்து கழக பணிமனையை தொடர்பு கொண்டார்.‘‘ஹலோ அம்மாவூர் இன்ஸ்பெக்டர் பேசறேன்… இன்னிக்கு அம்மாவூர் வழியா சென்னைக்கு உங்க பஸ் வந்துகிட்டிருக்கு… அது பத்தின டீடைல் வேணும்..?’’‘‘கொஞ்சம் இருங்க சார்…” சில நொடிகளில் மீண்டும் லைனில் பதில் கிடைத்தது.

ஆமா சார்… அந்த பஸ் கோயம்பேட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு… டூட்டி முடிச்சிட்டு கண்டக்டர், டிரைவர் கூட ரிலீவ் ஆய்ட்டாங்களே…”
‘‘சரி… அவங்க செல் நம்பர எஸ்.எம்.எஸ். பண்ணுங்க…’’ உடனே டாக்டர் விமலாவிடமிருந்து ஃபோன். ‘‘சார் வள்ளி புருஷன் வந்துட்டாரு… கலாட்டா பண்றார் சார்… வாசல்ல உட்கார்ந்து தர்ணா பண்றாரு…’’

‘‘ஓகே… ஓகே இப்ப நான் அங்க
வர்றேன்…” டிரைவரிடம் வண்டியை
ஆஸ்பத்திரிக்கு திருப்ப சொன்னார்.
நடுவில் எஸ்.எம்.எஸ். வந்தது. உடனே கண்டக்டரை தொடர்பு கொண்டு
விஷயத்தை சொல்ல, பிடி கிடைத்தது.

‘‘ஆமா சார்… ஒரு அம்மா பர்தா போட்டிருந்திச்சு… அம்மாவூர்ல ஏறிச்சு… ஆனா, வழில நான் ஸ்டாப்பிங்ல கேட்டு இறங்கிச்சு சார்!”
‘‘நான் ஸ்டாப்பிங்கிலியா… ஏன் நிறுத்தினீங்க?”
‘‘பாவம்… சார் குழந்தையோட இருந்திச்சு…”
‘‘சரி… எந்த ஊர் பக்கத்துல?”

‘‘பூந்தமல்லி முன்னாடி… டோல்கேட் கிட்ட…”
‘‘முன்னாடியா பின்னாடியா?”
‘‘முன்னாடி சார்…” அவங்களுக்காக ஒரு கருப்பு மாருதி கார் காத்திருந்துச்சு சார்…”
‘‘சரி… ஃபோன் ஆன்லயே இருக்கட்டும்… ஓகே?”
சொன்ன இன்ஸ்பெக்டர் டாக்டர்
விமலாவை தொடர்பு கொண்டார்.

‘‘டாக்டர் ஆல்மோஸ்ட் குற்றவாளிய நெருங்கியாச்சு… வள்ளி கிட்ட சொல்லிடுங்க. நான் வர்ற லேட்டாகும்…” பதிலை எதிர்பாராது செல்லை ஆஃப் பண்ணினார். டிரைவர் புரிந்து கொண்டு ஜீப்பை டோல்கேட் நோக்கி திருப்பினார்.வண்டியை டோல்கேட்டிற்கு முன்பே நிறுத்த சொன்னார். ஓரத்திலுள்ள ஒரு இளநீர் கடைக்காரரிடம் சென்றார். ‘‘பெரியவரே… நல்லா யோசிச்சு சொல்லணும். ஒரு கருப்பு மாருதி இப்ப ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள்ள இந்த பக்கமா வந்திருக்கு. பஸ்லேர்ந்து இறங்கின ஒரு பர்தா போட்டவங்கள கூட்டிகிட்டு போயிருக்கு. அத பத்தி விசாரிக்க வந்திருக்கேன்!”பெரியவர் யோசித்தார்.

‘‘ஆமா சார்… அந்த கார் கொஞ்சம் தொலைவுலதான் நின்னுகிட்டிருந்தது. யாராவது இறங்கி ஏறினாங்கலான்னு நான் பாக்கல. ஆனா, சார் திரும்பி போறப்ப கவனிச்சேன். கார் முன்னாடி மஞ்சள், கருப்பு கொடி பறந்திச்சு. ஆனா, நம்பர கவனிக்கல சார்…”இன்ஸ்பெக்டர் உடனே அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பை விரட்டினார். அங்கிருந்த ஹெட் கான்ஸ்டபிளை விசாரித்தார்.‘‘நான் அம்மாவூர்லேர்ந்து வர்றேன்…” விஷயத்தை சொன்னார் ஆனந்த்.

‘‘சார்… நீங்க சொல்ற கருப்பு கார், இங்க பக்கத்துல உள்ள சேர்மன் ரத்தினசாமியோடது. அவரு இந்த பக்கத்துல உள்ள விஐபி சார். நீங்க நினைக்கற மாதிரி அவரு இந்த திருட்டுல சம்பந்தப்பட்டிருக்க சான்ஸே இல்லையே சார்.”

‘‘அப்படின்னா.. அவர் காரை வேற யாராவது யூஸ் பண்ணியிருப்பாங்களா?”
‘‘தெரியலையே சார்…”
‘‘சரி… அவருக்கு குழந்தையிருக்கா?”
‘‘ஆங்.. இல்ல சார்… ஆனா?”
‘‘நோ… நோ… கேஸ் முடிவுக்கு வந்தாச்சு. ரொம்ப தேங்க்ஸ்…” சொல்லிவிட்டு
ரத்தினசாமி முகவரிக்கு விரைந்தார் இன்ஸ்பெக்டர் ஆனந்த்.

‘‘இங்கே அம்மாவூர்ல வள்ளியின் கணவர் மருத்துவமனை வாசலில் ஊரை கூட்டிக் கொண்டிருந்தான். என்ன ஆஸ்பத்திரி இது? கொஞ்சம் கூட பாதுகாப்பில்லையே? இங்க வேலைல இருக்குற அத்தனை பேரையும் உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன்…!’’ வள்ளியோ… ‘‘கத்தாதீங்க… இன்ஸ்பெக்டர் குழந்தைய தேடித்தான் போயிருக்காரு… வந்திடுவாரு” என்று கணவனை அடக்கிக் கொண்டிருந்தாள்.
இதே களேபரம் கொஞ்ச நேரம் நீடிக்க… இன்ஸ்பெக்டர் ஜீப் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. வள்ளியும், அவள் கணவனும் ஜீப்பை சூழ்ந்து கொள்ள… இன்ஸ்பெக்டர் பலத்த யோசனையுடன் சோகமாக இறங்கினார்.

முதலில் ஆனந்த், வள்ளியின் கணவரை கூப்பிட்டார். ‘‘இங்க பாருப்பா… நாங்க ஓரளவு குற்றவாளிய நெருங்கிட்டோம். ஆனா, கடைசில எஸ்கேப் ஆய்ட்டாங்க. குழந்தை பத்திரமா இருக்கு. நீ இப்படி கலாட்டா பண்ணினா நியூசன்ஸ்ல புடிச்சு உள்ளே போட்டுடுவோம்…” மிரட்டினார்.கொஞ்சம் பயந்தான் வள்ளியின் கணவன். பிறகு ஆனந்த் டாக்டரிடம், ‘‘ஒரு டூ டேஸ்ல கேஸ் சால்வாய்டும்…”‘‘ஓகே சார்.. எனி ஹெல்ப்… என்னை கான்டாக்ட் பண்ணுங்க…” டாக்டர் விமலா கனிவாக கூறினாள்.

கடைசியாக வள்ளியை கூப்பிட்டார். ‘‘என் கூட வாம்மா. ஒரு கம்ப்ளெய்ன்ட் எழுதிக் கொடு…” என்று அங்கிருந்த தனி அறைக்கு அழைத்து சென்றார். மற்றவர்களை வெளியேற்றி விட்டு இன்ஸ்பெக்டர் வள்ளியை பார்த்தார்.‘‘எனக்கு எல்லாம் தெரியும்மா. ஆனா, ஒண்ணு மட்டும் புரியல. தாய்ப்பாசம் தான் உலகத்துல உயர்ந்ததுன்னு சொல்வாங்க… ஆனா, நீங்களே உங்க குழந்தைய தெரிஞ்சு திருட்டு கொடுத்திருக்கீங்க. எப்படி மனசு வந்தது?”ஆச்சரியமாக கேட்டார்.

வள்ளியின் கண்களில் நீர் வார்க்க தலை குனிந்தாள்.‘‘அய்யா… நீங்க சொல்றபடி என் மனச கல்லாக்கிகிட்டுதான் இந்த காரியத்தை செஞ்சேன். காரணம், வறுமை. அதுக்கு காரணம் என் கணவன். முழு நேர குடிகாரன். ஏற்கனவே உள்ள ரெண்டு பொம்பள பசங்கள என்னால சரியா வளக்க முடியல.. இது மூணாவது. எப்படி சமாளிக்க முடியும்? இந்தாள நம்பினா இந்த குழந்தைக்கும் நான் துரோகம் செய்யற மாதிரி ஆய்டும். நல்ல சோறு, நல்ல இடம், நல்ல துணிமணி என்னால தர முடியாது. அப்பதான் இந்த பணக்காரர் அனுப்பின ஒரு புரோக்கர், தற்செயலா என்னை பார்த்தாரு. அவங்க கொடுக்கறேன்னு சொன்ன பணத்தை கூட நான் வாங்கலைய்யா… என் குழந்தை நல்ல எடத்துல வளர்ந்தா போதும். ஆனா, வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்து பாக்கற வாய்ப்பு மட்டும் தாங்கன்னு கேட்டேன். ஒத்துக்கிட்டாங்க.

அவங்க மேல எந்த தப்பும் இல்ல.நான் ஒத்துக்கிட்டுதான் இது நடந்தது. எனக்கு என் குழந்தை வேண்டாம். இங்க இருந்து அவன் கஷ்டப்பட வேண்டாம். என்னால இனிமே கஷ்டப்பட்டு உழைக்க முடியாது. அதே சமயம் என் புருஷனை திருத்த முடியாது. இத்தோட விட்டுடுங்க ஐயா…” வள்ளி கெஞ்சினாள்.இன்ஸ்பெக்டரின் மனசு வலித்தது. பெற்ற குழந்தை மேல் நிகரற்ற பாசம் வைப்பதால் தாய்மையை போற்றுகிறோம். அதே நேரம் தன் தாய்மையையும், தன் அருகாமையையும் விட்டுக் கொடுத்து அந்த தியாகத்தை கூட தன் குழந்தைக்காக செய்யும் வள்ளியை, தாய்மையின் எல்லை என்று நினைக்கத் தோன்றியது. இந்த வழக்கில் யார் குற்றவாளி… வள்ளியா? ரத்தினசாமியா? இல்லை சூழ்நிலையா?இன்ஸ்பெக்டர் கணத்த மனதோடு வள்ளியை அனுப்பினார்.

தொகுப்பு: கீதா சீனிவாசன்

Tags : Ammaaur ,Tamil Nadu ,
× RELATED பசுமை ஆஸ்கார் விருது பெற்ற இந்தியப் பெண்மணிகள்!