×

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா..? டிரம்ப் அறிவித்த புதிய ஒப்பந்தம் பொய்: ஈரான் அரசு தரப்பு மறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். அமெரிக்கா, ஈரான் மற்றும் இதர நாடுகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன. இதற்காக வளைகுடா மற்றும் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் விரிவாகப் பேசினேன்’ என்று கூறியுள்ளார்.

டிரம்ப் அறிவித்துள்ள இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகள் விடுவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு ஆதரவு ஊடகமான ‘பார்ஸ் நியூஸ்’ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில், ‘ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கும். டிரம்ப் கூறுவது போல, இந்த ஜலசந்தி தடையின்றி திறக்கப்படவில்லை.

போருக்கு முந்தைய நிலைக்கு கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க மட்டுமே ஈரான் சம்மதித்துள்ளது. இது தடையற்ற போக்குவரத்து என்று அர்த்தமல்ல’ என்று தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டம் மற்றும் யுரேனியம் கையிருப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதால், இந்த ஒப்பந்தம் குறித்த தெளிவான இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்று ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சமாதான முயற்சி வெற்றி பெறுமா அல்லது மீண்டும் சிக்கலாக மாறுமா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

Tags : Strait of Hormuz ,Trump ,Iran ,Washington ,Hormuz ,US ,President ,United States ,
× RELATED பெண்கள் மற்றும் குழந்தைகள்...