டெல்லி: குஜராத் மாநிலம் பிபாவ் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்த வழக்கில், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று குஜராத் மாநிலம் பிபாவ் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை விமர்சித்து வாய்மொழியாக கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் அவர், ‘பிபாவ் துறைமுக விரிவாக்கத் திட்டம் வரவேற்கத்தக்கது. நாடு முன்னேறுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டியதை காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து, நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவில் இடம்பெறவில்லை என்றாலும், இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியின் முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹர்ஷ் மாந்தர், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கே. ரகுநாத் மற்றும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை செயலாளர் மீனா குப்தா உள்ளிட்ட 71 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ‘அரசியலமைப்பு நடத்தை குழு’ தலைமை நீதிபதி சூர்ய காந்திற்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘இத்தகைய கருத்துகள் குடிமக்களின் கருத்துரிமையைக் குறைத்து, அச்சத்தை விதைக்கும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதை தடுத்துவிடும்.
இது ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என்பதால், நாட்டின் உயரிய நீதித்துறை பதவியில் இருப்பவர் இத்தகைய பாரபட்சமான கருத்துகளைத் தவிர்த்திருக்க வேண்டும்’ என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
