×

திருச்சி ஜி.ஹெச்சில் தவறான சிகிச்சையால் இறந்த நர்சிங் மாணவி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: சொந்த ஊரில் கண்ணீர் அஞ்சலி

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறப்பட்ட நர்சிங் மாணவி உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மணக்குடிபட்டியில் இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 273 நர்சிங் மாணவிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டியை சேர்ந்த சேட்டு-கலைச்செல்வி தம்பதியின் மகள் சீதாலட்சுமி(21). இவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தான் படிக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். ​இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே மாணவி உயிரிழந்தார்.

இந்நிலையில் தவறான சிகிச்சையால் தான் மாணவி உயிரிழந்ததாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், அரசு மருத்துவமனை முன்பு காலை முதலே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், துணை சபாநாயகர் ரவிசங்கர், அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் சரவணன், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், போலீஸ் துணை கமிஷனர் சிருஷ்டி சிங், கல்லூரி டீன் குமரவேல் ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அமைச்சர், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் மயக்க மருந்துகள் துறையை சேர்ந்த 4 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை மேற்கொள்வர்கள் என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்ட மாணவிகள், உரிய நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறி கலைந்து சென்றனர். தொடர்ந்து மாலை மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கலெக்டரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த அளிக்கப்பட்ட உறுதியை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதையடுத்து மாணவர் சங்க பிரதிநிதிகள், நர்சிங் பயிற்சி மாணவிகளின் பிரதிநிதிகள், மாணவியின் உறவினர்கள் 3 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கலெக்டர் சரவணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, டிஆர்ஓ பாலாஜி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் இரவு 11 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் விடுதிக்கு சென்றனர்.

இந்நிலையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடல் சொந்த ஊரான மணக்குடிபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்குகள் செய்யப்பட்டது. இதில் 273 நர்சிங் மாணவிகள் அரசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டு கலந்துகொண்டனர். இதையடுத்து மாணவி உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவி இறந்தது தொடர்பாக சந்தேக மரணம் என திருச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy G. ,Hech ,Trichy ,Trichy Government Hospital ,
× RELATED தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்றும்...