குரு வந்து அமர்ந்தவுடன், சீடன் பரபரப்போடு கேட்டான்.
‘‘என்ன சுவாமி, ஆன்மிகம் என்பது அமைதியைப் போதிப்பதுதானே. உலகம் முழுக்க அமைதியாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆன்மிகத்தை எல்லோரும் கடைப்பிடிக்கிறோம். ஆனால், உலகத்தில் எந்தப் பகுதியும் அமைதியாக இல்லையே சுவாமி. போராட்டமாகத்தானே இருக்கிறது. ஏன் மகாபாரதத்திலேயே, அமைதியை போதிக்க வேண்டிய பகவான் கிருஷ்ணர், போர் செய் என்றுதானே அர்ஜுனனைத் தூண்டுகிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது?’’ என்று கேட்டான்.
குரு அமைதியாக அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்.
‘‘நீ ஏனப்பா இத்தனைப் பதற்றப்படுகிறாய்? சற்று பொறுமையாக நான் சொல்வதைச் கேள். உலகம் அமைதியாக என்றும் இருந்தது கிடையாது. அப்படி இருப்பதற்கும் வழியில்லை. ஆனால், இங்கு நடைபெறும் போராட்டம், போர்கள் இவற்றின் தத்துவத்தைப் புரிந்து கொண்டால்தான் உன்னால் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்ள முடியும்.’’
‘‘அப்படியானால் போர்களும் போராட்டமும் இயல்பானதுதான் என்கிறீர்களா’’
‘‘அதில் என்ன சந்தேகம்? பிறக்கும்போதே கருப்பையில் போராடித்தான் நாம் வெளியே வந்திருக்கிறோம். ஒரு உயிர் உருவாகும்வரை போராட்டம், அது படிப்படியாக வளரும் வரை போராட்டம். கருப்பை இருட்டில் எப்போது வெளியே வருவோம் என்று துடிக்கும் துடிப்பு போராட்டம். வெளியே விழுந்த பிறகு ஒவ்வொரு நொடியும் போராட்டம்.’’
‘‘சீடனே! அந்தக் குழந்தை பிறந்தவுடன் எந்தத் துடிப்பும் அசைவும் இன்றி, அழுகை இன்றி அமைதியாக இருந்தால், நமக்கு அமைதியைத் தருமா? ஆனந்தத்தைத் தருமா?’’
‘‘ஆனந்தத்தைத் தராது. குழந்தை அமைதியாக இருந்தால் நம்முடைய அமைதி பறிபோய்விடும். உடனே பதற்றத்தோடு வைத்தியம் பார்க்கத் தொடங்கி விடுவோம்.’’‘‘ஆம் அதுதான் உண்மை. அந்தக் குழந்தை துடிக்கும்பொழுதுதான், அது உயிரோடு இருக்கிறது என்னும் சந்தோஷம் நமக்கு வரும். எனவே, ‘‘துடிப்பு’’ தான் போராட்டம். அது இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.’’குரு தொடர்ந்தார்.
‘‘அடுத்தடுத்து நம் உடம்புக்குள்ளே நடக்கும் வெவ்வேறு போர்களினால்தான் நாம் உயிரோடு இருக்கிறோம். ஒரு விதையானது மண்ணுக்குள்மூடி, மூச்சு முட்ட போராடித்தான், விருட்சமாக வெளியே வருகிறது. எத்தனையோ போர்கள் தந்த விளைவுதான், இன்றைக்கு கிடைத்த சுதந்திரமும் அமைதியும் நாகரிகமும்’’.‘‘மனிதன் உயிருக்குப் போராடும் பொழுதுதான் பல மருந்துகள் கண்டு பிடிக்கப்படுகின்றன.’’
‘‘அப்படியானால் அமைதியற்றுத் தவிப்பதற்குத்தான் ஆன்மிகமா?’’
‘‘அல்ல.. அமைதி இன்மையின் போது அமைதியாக இருப்பதற்காகத்தான் ஆன்மிகம்.’’
‘‘புரியவில்லை சுவாமி. அமைதியின்மையில் அமைதியா?’’
‘‘சீடனே, பலரும் ஆன்மிகத்தை ஒரு ‘‘நிவாரணி’’ (Painkiller) போலப் பார்க்கிறார்கள். அதாவது கஷ்டம் வரும்போது மட்டும் அமைதியைத் தேடுவது. ஆனால், உண்மையான ஆன்மிகம் என்பது ஒரு தற்காப்புக்கலை (Martial Art) போன்றது. வெளியே புயல் வீசினாலும், உள்ளே இருக்கும் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ளும் மனப்பக்குவமே அது’’ குரு மேலும் தொடர்ந்தார்.
‘‘நீ குருக்ஷேத்ரத்தைப் பற்றியும், கண்ணன் போர் செய்யத் தூண்டியதைப் பற்றியும் கேட்கிறாய். போர்க்களத்தில் அர்ஜுனன் நிலை குலைந்து நின்றபோது, கிருஷ்ணர் அவனை இமயமலைக்குச் சென்று தவம் செய்யச் சொல்லவில்லை. மாறாக, போர் செய், ஆனால், பற்றற்று இரு என்றார். அமைதியின்மையை எதிர்த்துப் போராடும் வரை அமைதி கிடைக்காது. ‘‘இப்போது சூழல் குழப்பமாக இருக்கிறது’’ என்பதை ஏற்றுக்கொண்டு, அந்தச் சலனத்திற்கு மத்தியிலும் சாட்சியாக (Witness) நிற்பதே ஆன்மிகப் பயிற்சி. கடலின் மேற்பரப்பில் அலைகள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளலாம் (அமைதியின்மை). ஆனால், ஆழத்தில் கடல் எப்போதும் அமைதியாகவே இருக்கிறது. அந்த ஆழத்தை எட்டும் கலைதான் ஆன்மிகம். வெளியே நடப்பவை நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால் உள்ளே நடப்பவை நம் பொறுப்பு.’’
‘‘அப்படியானால் அமைதி என்பதற்கு என்ன பொருள்?’’
‘‘அமைதி என்பது ‘‘செயலின்மை’’ அல்ல. மாறாக, பெரும் கொந்தளிப்புகளுக்கு இடையிலும் மனதை நிலை நிறுத்தும் ஒரு கலை. இருள் இல்லாமல் வெளிச்சத்தின் மதிப்பு தெரியாது. அதுபோலவே, போராட்டங்கள் இல்லாத உலகில் அமைதியின் அருமை புரியாமல் போய்விடும்.’ ’சீடன் மௌனமாக இருந்தான். அவனுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது.
‘‘சீடனே. நீ அமைதியைப்பற்றி கேட்கிறாய். நம்முடைய உடம்பில் சதாசர்வ காலமும், நம்முடைய உடம்பு, நம்மை நல்லபடியாக வைத்திருக்க, போராடிக் கொண்டு இருப்பதை நீ அறிகிறாயா? உணர்ந்து இருக்கிறாயா?’’
‘‘இல்லை சுவாமி. நான் அமைதியாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன்.’’
‘‘நீ அமைதியாக இருக்க உன் உடம்பில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது. நமது உடல் என்பது அமைதியாகத் தெரியும் ஒரு ‘‘மகா போர்க்களம்’’. வெளியே நாம் அமைதியாக அமர்ந்திருக்கும்போது கூட, நமக்குள் ஒரு பிரம்மாண்டமான போராட்டம் ஓயாமல் நடந்து கொண்டி ருக்கிறது. ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான கிருமிகள், வைரஸ்கள் நம் உடலுக்குள் நுழையப் பார்க்கின்றன. நமது வெள்ளை அணுக்கள் (White Blood Cells) ஒரு பெரும் இராணுவத்தைப் போல அவற்றுடன் இடைவிடாது போரிட்டு, நம்மை ‘‘நல்லபடியாக’’ வைத்துக் கொள்கின்றன. சுற்றுப்புற வெப்பம் மாறினாலும், உணவு மாறினாலும், உடலின் உள் வெப்பத்தையும், வேதியியல் சமநிலையையும் சீராக வைக்க செல்கள் கடுமையாகப் போராடுகின்றன. பழைய செல்கள் மடிவதும், புதிய செல்கள் உருவாவதும் ஒரு தொடர் போராட்டம். சிதைவிலிருந்து (Decay) நம்மைப் பாதுகாத்து, வாழ்வைத் தக்கவைக்க உடல் காட்டும் வீரியம் அது.
குரு கூர்மையாக சீடனைப் பார்த்தார். சிறிய அமைதிக்குப்பின் தொடர்ந்தார்.
‘‘உடல் தன் போராட்டத்தை நிறுத்திவிட்டால், அதுவே மரணம். அதுபோலவே, வாழ்க்கையில் சவால்களும் போராட்டங்களும் இருப்பதுதான் நாம் ‘‘உயிர்ப்புடன்’’ இருப்பதற்கான அடையாளம். உடல் இவ்வளவு போராடியும், வெளியே நாம் ‘‘சௌகரியமாக’’ உணர்கிறோம் அல்லவா? அதுதான் சமநிலை. போராட்டமே இல்லாத நிலை ஆரோக்கியம் அல்ல; போராட்டத்தை வெற்றிகரமாகக் கையாண்டு சமநிலையைத் தக்க வைப்பதே ஆரோக்கியம். உடம்பு என்பது ஒரு கோயில் என்பார்கள். ஆனால், அந்த கோயிலுக்குள் ஒரு அணையாத யாகம் (போராட்டம்) நடந்து கொண்டே இருக்கிறது. இந்த உடலின் போராட்டத்தை நாம் கவனித்துப் பார்த்தால், ‘அமைதி’ என்பது சோம்பேறித்தனம் அல்ல, அது உயர்ந்தபட்ச இயக்கம் (Dynamic Balance) என்பது புரியும். உடலின் இந்த ரகசியத்தை உணர்ந்தவன், வாழ்க்கையின் போராட்டங்களைக் கண்டு அஞ்ச மாட்டான்.’’நிறைவாக குரு சொன்னார்.
‘‘சீடனே, வெளி உலகில் போர்களை நிறுத்த நம்மால் முடியாமல் போகலாம். ஆனால், அந்தப் போராட்டங்களுக்கு நடுவிலும் ‘‘சலனமற்ற ஒரு நிலையை’’ நமக்குள்ளே உருவாக்கிக் கொள்வதுதான் உண்மையான ஆன்மிக அமைதி. உலகம் மாறாது, ஆனால், உலகைப் பார்க்கும் நமது பார்வை மாறும்போது, போராட்டங்களுக்கு மத்தியிலும் அமைதி சாத்தியப்படும்’’.
