×

ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு; குடிநீர் வாரிய அதிகாரி ரூ.100 கோடி சொத்து குவிப்பு: 2 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

திருமலை: குடிநீர் வாரிய அதிகாரி வீடு மற்றும் பினாமிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் ரெட்ஹில்ஸ் பிரிவின் பொதுமேலாளராக பணிபுரிந்து வருபவர் அனந்தலட்சுமி குமார். இவர் தனது பதவியை பயன்படுத்தி ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தலா ரூ.5,000ஐ சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு தண்ணீர் டேங்கர்களை விற்பனை செய்து வந்ததாகவும், இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை வசூலிப்பதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமை இயக்குநர் சாருசின்ஹா தலைமையில் டிஎஸ்பி மஜித்அலி மற்றும் போலீசார் குமாரின் வீடு, அலுவலகம் உள்பட 8 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். மல்லாபூரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது பினாமிகளின் வீடுகளிலும் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

முதற்கட்ட விசாரணையில் அனந்தலட்சுமி குமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளது கண்டறியப்பட்டது. மல்லாபூரில் உள்ள குமாரின் வீட்டில் இருந்து சுமார் ரூ. 1.10 கோடி ரொக்கம், 2.1 கிலோ தங்க நகைகள், 9.2 கிலோ வெள்ளிப்பொருட்கள் பதுக்கியது தெரிய வந்தது. மேலும் குமாரின் மனைவி பெயரில் இருந்த வங்கி லாக்கரை திறந்து பார்த்தபோது பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், தங்க நகைகளும் இருந்தது. இவை அனைத்தையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நிஜாமாபாத் மற்றும் சங்கரெட்டியில் உள்ள வீட்டுவசதி திட்டங்களில் அனந்தலட்சுமிகுமார் 3 அடுக்குமாடி குடியிருப்புகள், 6 வீட்டுமனைகள், ஒரு ஆடம்பர வீடு மற்றும் 18 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. அவரது வீட்டில் ஒரு மாருதி ரிட்ஸ் காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டன. ஊழல் தடுப்பு பிரிவால் அடையாளம் காணப்பட்ட அனந்தலட்சுமி குமாரின் சொத்துக்களின் மதிப்பு ரூ.5,88,55,490 ஆகும். ஆனால், சொத்துக்களின் சந்தை மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

அனந்தலட்சுமி குமாருக்கு பினாமியாக இருந்த சில உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அனந்தலட்சுமி குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Unit ,Water Board ,Thirumalai ,Anti-Corruption Unit ,board ,Pinyams ,
× RELATED தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும்...