டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் கடைசி கட்டமாக நேற்று இத்தாலியின் தலைநகர் ரோமுக்கு சென்றடைந்தார். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் இரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றார். மோடியின் ஐந்து நாடு பயணத்தின் இது ஐந்தாவது மற்றும் இறுதி கட்டமாக இத்தாலி பயணம் அமைந்துள்ளது.
விமான நிலையத்தில் இந்திய பிரதமரை இத்தாலிய பிரதமர் மெலோனி தனிப்பட்ட முறையில் சென்று வரவேற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் “Welcome to Rome, my friend!” என்று பதிவிட்டு மோடி உடனான நெருங்கிய நட்பை வெளிப்படுத்தினார் மெலோனி.
இந்த பயணத்தில் இத்தாலிய பிரதமருக்கு, மோடி தனிப்பட்ட முறையில் ‘மெலோடி சாக்லேட் பாக்கெட்டை பரிசாக அளித்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சாக்லேட்டின் பெயர் ‘மெலோடி’ என கேட்டதும் மெலோனி மகிழ்ச்சியுடன் சிரித்தார். இதை வீடியோவாகவும் இருவரும் பதிவிட்டனர்.
இந்நிலையில் ‘இளைஞர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்; பிரதமர் மோடியின் கவனமோ மெலோடி சாப்பிடுவதில் உள்ளது’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“நமது தலைக்கு மேல் ஒரு பொருளாதார புயல் வீசிக்கொண்டிருக்கிறது, ஆனால் நமது பிரதமரோ இத்தாலியில் சாக்லேட் வழங்குவதில் பிஸியாக இருக்கிறார்!
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர் – ஆனால் பிரதமரோ சிரித்துக் கொண்டும், ரீல்ஸ் (reels) செய்து கொண்டும் இருக்கிறார், இதற்கிடையில் பா.ஜ.க-வினர் கைதட்டி மகிழ்கிறார்கள்.
இது தலைமைத்துவம் அல்ல, இது ஒரு கேலிக்கூத்து” என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
