சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை பதவியில் இருந்து நீக்காவிட்டால் வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில் பொதுக்குழுவை கூட்ட எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்து இருந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்தது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம்-எஸ்.பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல, அதிமுகவில் தாங்கள் தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவை தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, கட்சி கொறடா உத்தரவை மீறி, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.
இவ்வாறு இரண்டு அணியினரும் மாறி, மாறி சபாநாயகரிடம் முறையிட்டு வருகின்றனர். இரண்டு அணியினரின் மனுக்கள் ஆய்வில் உள்ளது. உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சட்டசபையில் எதிராக வாக்களித்தவர்கள் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்த 28 மாவட்ட செயலாளர்கள் பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். எடப்பாடியின் பதவி பறிப்பு செல்லாது.
அவர்கள் அனைவரும் மாவட்ட செயலாளர்களாக தொடருவார்கள் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பு அறிவித்தது. இதனிடையே எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும், பிரிந்தவர்கள் சேர வேண்டும், கட்சியைப் பலப்படுத்த வேண்டும், இபிஎஸ் அழைத்தால் நாங்கள் பேசத் தயார் என்று கூறியிருந்தது. அதன்படியே, அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பு கையெழுத்து பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவை கூட்ட கோரினால் யாரும் கையெழுத்து போட வேண்டாம் என தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார். இருந்த போதிலும் எஸ்.பி.வேலுமணி தரப்பு கையெழுத்து வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 59 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்தை எஸ்.பி.வேலுமணி தரப்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்தை வாங்கி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பு எடப்பாடியை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளது.
இதனால் அதிமுகவில் உள்ள இரு அணிகளில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரப்பான சூழ்நிலையில் எடப்பாடி தரப்பு ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தவெக அரசை ஆதரித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது, 2 நாட்களுக்குள் சபாநாயகர், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி தரப்பு வழக்கு தொடர மும்முரம் காட்டி வருகிறது. எஸ்.பி.வேலு மணி தரப்பு பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை எடுக்க தீவிரம் காட்டி வருவதால் அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழலுக்கு மத்தியில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் இபிஎஸ் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
* நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரை சந்தித்து எடப்பாடி தரப்பு வலியுறுத்த இருந்தனர்.
* அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருந்து
வருகிறது.
* 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது, 2 நாட்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.
* அதேநேரத்தில், எஸ்.பி.வேலு மணி தரப்பு பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
