×

தேர்தல் முடியும் வரை காத்திருந்து இடியை இறக்கியது ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி

 

 

 

சேலம்: தேர்தல் முடியும் வரை காத்திருந்த ஒன்றிய அரசு, நாடு முழுவதும் நேற்று அதிகாலை பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 ஆகவும், டீசல் ரூ.95.25 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு, அந்நிய செலாவணி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்கிறது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரத் துவங்கியது. மேலும், ஈரான் கடல் பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி, வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்களை கடக்கவிடாமல் தடுத்தது.

இதன்காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு சவுதிஅரேபியா, குவைத், ஓமன் நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய், எல்பிஜி காஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஓசிஎல், பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளன. இந்தியாவிற்கு வர வேண்டிய 10க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் ஓமன் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில், கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய் 65 டாலரில் இருந்து 108 டாலருக்கு மேல் சென்றுவிட்டது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதமே தெரிவித்தன.

ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தாமல் ஒன்றிய பாஜ அரசு பார்த்துக்கொண்டது. தற்போது தேர்தல் முடிந்துவிட்டநிலையில், முதலில் கடந்த மே 1ம் தேதி, 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.998 உயர்த்தினர். இதன்மூலம் நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் சுமார் ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்கப்படுகிறது. அன்றைய தினத்தில், 5 கிலோ சிறிய சிலிண்டர் மற்றும் விமான எரிபொருளான ஒயிட் பெட்ரோல், தொழிற்சாலைகளுக்கான டீசல் ஆகிவற்றின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
இந்நிலையில் மே 15ம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதன்படியே நேற்று (15ம் தேதி) அதிகாலை நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதனால், தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77 ஆகவும், டீசல் ரூ.90.67 ஆகவும் அதிகரித்தது. இதுவே மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.68 ஆகவும், டீசல் ரூ.93.14 ஆகவும் உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று முன்தினம் ரூ.100.84க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.3.14 உயர்ந்து ரூ.103.98 ஆகவும், டீசல் ரூ.93.71ல் இருந்து ரூ.3.11 உயர்ந்து ரூ.96.82 ஆகவும் அதிகரித்தது. இதுவே சேலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.66ல் இருந்து ரூ.2.84 உயர்ந்து ரூ.104.50 ஆகவும், டீசல் ரூ.93.26ல் இருந்து ரூ.2.86 உயர்ந்து ரூ.96.12 ஆகவும், பிரீமியம் பெட்ரோல் ரூ.109.82ல் இருந்து ரூ.2.84 உயர்ந்து ரூ.112.66 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வர்த்தக சிலிண்டர் விலையை பெருமளவு உயர்த்தியதால், ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது.

தற்போது பெட்ரோல், டீசல் விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதால், உணவுகளின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசு மேற்கொண்ட இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணவீக்கத்தின் காரணமாக அனைத்துவித பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டிருக்கும்நிலையில், எரிபொருள் விலை உயர்வு அன்றாட வாழ்வில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
வரும் நாட்களில் இவ்விலை உயர்வு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும், தினசரி விலை நிர்ணயம் என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் இருப்பதால் இனி பைசா கணக்கில் தினமும் விலையை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags : EU government ,UNION GOVERNMENT ,FEDERATION OF OIL COMPANIES ,Chennai ,
× RELATED உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை...