அமராவதி: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வாகன தொடரில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஆந்திர அமைச்சர்களும் முக்கியப் பிரமுகர்களும் (VIPs) தங்கள் வாகன பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களும், அதன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் நிதிநிலை மீது ஏற்படக்கூடிய அழுத்தங்களை கருத்தில் கொண்டு , பிரதமர் அறிவித்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த முடிவை எடுத்துள்ளார்.
மாவட்ட சுற்றுப்பயணங்களின் போது தன் காரை பின்தொடர்ந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்குமாறும், இத உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறும் ஆந்திர முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இது தவிர ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு “வாகனம் இல்லா வெள்ளிக்கிழமை” (No Vehicle Friday) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளளார். இந்த வாராந்திர முயற்சியின்படி, அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் தங்களின் சொந்த அல்லது அரசு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அமைச்சர்கள், விஐபி-க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் பயணங்களுக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்த அல்லது நடந்து செல்ல இந்த No Vehicle Friday மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு இந்தத் திட்டம் கட்டாய விதியாக விதிக்கப்படவில்லை; மாறாக ஒரு தன்னார்வ விழிப்புணர்வு அழைப்பாக (Voluntary Appeal) விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மக்கள் அவசியமில்லாத மோட்டார் வாகனப் பயணங்களைத் தவிர்த்து, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பொதுப் போக்குவரத்து (Public Transport), மிதிவண்டிகள் (Bicycles) அல்லது நடைப்பயணத்தை மேற்கொள்ள இந்த திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த திட்டம் குறித்து பேசி இருக்கும் ஆந்திர முதல்வர் “நாடு நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நாட்டிற்குத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. எனவே ஆந்திராவில் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டு கொண்டுள்ளார்.
