×

மானம் போற்று

‘மானம் பெரிதென்று எண்ணும்’ மரபுதான் நம்முடைய இந்திய மரபு.
ராமாயணக் காவியமே ஒரு பெண்ணின் மானம் காக்க எழுந்த காவியம்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
துச்சாதனன் அவையில் துகில் உரியப்பட்டபோது பாஞ்சாலியின் சீற்றம் பாரதப் பெண்மையின் சீற்றம் அல்லவா?
‘தேரா மன்னா செப்புவதுடையேன்..’ என்ற கண்ணகியின் முழக்கமும் தன் கணவனின் மானம் காக்க எழுந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் போர் முழக்கமல்லவா?
‘இளிவரின் வாழாத மானம் உடையார்..’ என்று மானத்தின் சிறப்பை வள்ளுவம் போற்றும்.
இஸ்லாமியத் திருநெறியும் மான உணர்ச்சிக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. பெண்களின் மானத்துக்கு ஓர் இழுக்கு என்றால் போர் முரசம் கொட்டவும் மார்க்கம் அனுமதியளிக்கிறது. கற்புடைய மகளிர் மீது அவதூறு சுமத்துவது பெரும் பாவம் என்றும், அவதூறு சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.
ஒரு பண்பாட்டை அழிக்க வேண்டுமானால் தீயசக்திகள் எப்போதுமே மனிதர்களின் மானத்தின் மீதுதான் முதல் தாக்குதல் தொடுக்கின்றன. இதிகாச காலங்களில் மட்டுமல்ல, உலகின் முதல் மனிதன் ஆதம் தோன்றியதிலிருந்தே இதுதான் நடந்து வருகிறது.
ஆதமும் அவர் மனைவியும் சொர்க்கத் தோட்டங்களில் மானத்தை மறைக்கும் உடைகள் அணிந்து கண்ணியமாய் வாழ்ந்துவந்தனர். அவர்களின் வெட்கத் தலங்களை வெளிப்படுத்துவதையே ஷைத்தான் தன் முதல் நோக்கமாகக் கொண்டான். அவர்களின் மான உணர்வைப் போக்கிவிட்டால் பிறகு அவர்களைத் தன் வலையில் விழச் செய்வது வெகு சுலபம் என்று ஷைத்தான் திட்டமிட்டான். இதைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
“அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்.” (குர்ஆன் 7:20)
ஆதம் காலத்து ஷைத்தானாகிய தீய சக்தி மட்டுமல்ல, இன்றைய நவீன கால தீயசக்திகளும் இதே உத்தியைத்தான் பயன்படுத்துகின்றன.
அதனால்தான் குர்ஆன் பல இடங் களில் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகள் குறித்து எச்சரித்து விழிப்பு உணர்வை ஊட்டுகிறது. மானத்தையும் கற்பையும் போற்றிக் காப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நற்செய்தி கூறுகிறது. “மானம் போற்று” என்று அன்றே கூறியது குர்ஆன்.
இந்த வார சிந்தனை
“இறைநம்பிக்கை கொண்டவர்களே, ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவற்றையும் தீயவற்றையும் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்.” (குர்ஆன் 24:21)

– சிராஜுல்ஹஸன்

Tags : Manam ,Panjali ,Dushadhan ,Tera Manna ,
× RELATED என் கடன் சிவப்பணி செய்து கிடப்பதே…