×

சோலார் உற்பத்தியில் அசத்தல் ‘‘தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்”: ஒன்றிய மின்சார ஆணையம் தகவல்

சென்னை: சூரியசக்தி மின் உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒன்றிய மின்சார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் உலக நாடுகள் அனைத்தும் ‘‘பசுமை ஆற்றல்’’ நோக்கி வேகமாக பயணித்து வருகின்றன. அந்த வகையில், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை சார்ந்திருக்காமல், இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தென்பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது.

அதன்படி, ஒன்றிய மின்சார ஆணையம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் தென்னிந்திய மாநிலங்களில் மொத்தம் 613 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகி உள்ளதாம். இதில் தமிழகம் மட்டும் தனிச்சிறப்பாக 218.60 கோடி யூனிட்களை உற்பத்தி செய்து முதலிடத்தை அலங்கரிக்கிறது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தின் உற்பத்தி 160 கோடி யூனிட்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு காலத்திற்குள் சுமார் 58 கோடி யூனிட்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி வேகமாக நடைபோடுகிறது. தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா 181 கோடி யூனிட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆந்திரா 113 கோடி யூனிட்களையும், தெலுங்கானா 71 கோடி யூனிட்களையும் உற்பத்தி செய்துள்ளன.

கேரளா 29 கோடி யூனிட்களுடன் அடுத்த இடத்தில் இருக்க, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 10 லட்சம் யூனிட்களை பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பீட்டு லிஸ்ட்டில், தமிழகத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் இருப்பது நன்றாகவே தெரியவருகிறது. தமிழகத்தில் நிலவும் சாதகமான வானிலைதான் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி தடையின்றி கிடைப்பதால், சூரியசக்தி மின் நிலையங்களுக்கு தமிழகம் ஒரு சொர்க்கபுரியாக மாறியுள்ளது. சூரியசக்தி மின் நிலையங்கள் இதன் விளைவாக, பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்புகளில் அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சாமானிய மக்களும் இப்போது சூரியசக்தியின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கி விட்டார்கள். கரண்ட் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவது தற்போது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது என்று சொல்லலாம். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 13,579 மெகாவாட் என்ற நிலையை எட்டியுள்ளது.

மழைக்காலங்களைத் தவிர்த்து மிச்ச நாட்களில் தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி யூனிட் வரை மின்சாரம் தங்குதடையின்றி உற்பத்தியாகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2024-25 நிதியாண்டில் 1,573 கோடி யூனிட்களாக இருந்த சூரியசக்தி மின் உற்பத்தி, 2025 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1,969 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தமிழகம் பசுமை ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்வதை உறுதிப்படுத்துகின்றன.

Tags : Tamil Nadu ,EU Electricity Commission ,Chennai ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள்...