- சென்னை
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- ஜே ஹெல்ட்
- குமரகுருபரன்
- தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல்
- சென்னை மாவட்டம்
சென்னை, ஏப்.29: வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரிபவர்களை, சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு பணி முடிந்ததும், ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 1,005 பேரை, முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் நேரில் ஆய்வு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறை, வாக்குகள் எண்ணும் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை துறை சார்ந்த அலுவலர்கள், காவல் துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றும், இந்த மையத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முரளி (தாம்பரம்), கியூரி (பல்லாவரம்), திருநாவுக்கரசு (சோழிங்கநல்லூர்), வட்டாட்சியர்கள் நடராஜன் (தாம்பரம்), செந்தில் (பல்லாவரம்), இலக்கியா (சோழிங்கநல்லூர்) மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உடன் இருந்தனர்.
