×

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.

குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஷவர்மா போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் மயோனைஸால் உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பச்சை முட்டையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மயோனைஸை உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

அந்தத் தடையானது கடந்த ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 8-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இந்தத் தடை அமலில் இருக்கும். பச்சை முட்டை மூலம் மயோனைஸ் தயாரித்தல், பதப்படுத்துதல், பேக்கேஜிங் செய்தல், சேமித்தல், போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகிய அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் எளிதில் உருவாக வாய்ப்புள்ளது. முறையான வெப்பநிலையில் சேமிக்கப்படாத போது, இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக் குறைபாடுகளை உண்டாக்கும் என்பதால், பொதுமக்களின் நலன் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED புதிய கட்சியைத் தொடங்கினார்...