சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியான முடிவெடுத்து வாக்களிக்கும் நாள் இன்று. எனவே, எந்த வேலை இருந்தாலும் மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க தவறாதீர்கள்.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சிமற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கும்.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து வாக்களிக்க சவுக்கு கட்டைகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வாக்கு எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டு, தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் வகையில் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து 1.4 லட்சம் போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கும் எண்ணும் மையங்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை, மாநகர ஆணையர்களுடன் இணைந்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இணைப்புடன் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் தலைமையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 105 காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட பகுதியில் உள்ள லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபட கூடுதல் கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

