* கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டம்
* அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகலில் இருந்து சுமார் 500 எள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் எள் மூட்டைகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சுமூகமாக பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் தானியங்களை கொள்முதல் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வெங்கடேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வியாபாரிகள், இந்த வளாகத்தில் தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுமையாக புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதையடுத்து வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் தனியாக அறை தேவைப்படுகிறது.
மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறது. அதனை சரிசெய்து கொடுக்க வேண்டியும், இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் மூட்டைகள் பிடிக்கவோ அல்லது மூட்டைகளை ஏற்றவோ முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனை சரிசெய்து கொடுக்க வேண்டி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுப்பினர். வியாபாரிகளின் கோரிக்கைகளை விரைந்து நிவர்த்தி செய்து கொடுப்பதாக போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கொண்டு வந்த எள் மூட்டைகளை கொள்முதல் செய்தனர். விவசாயிகள் சாலை மறியல் மற்றும் வியாபாரிகள் போராட்டம் காரணமாக கள்ளக்குறிச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
