திருவள்ளூர், ஏப்.21: திருவள்ளூரில் ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுப்பவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என்று கலெக்டர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அரசின் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டியெடுத்து, வாகனங்களில் கடத்திச்செல்வது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின்பேரில், கடந்த 16.4.2026 அன்று திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களால் ஊத்துக்கோட்டை வட்டத்தில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது, உரிய அனுமதி நடைச்சீட்டு இல்லாமல் கள்ளத்தனமாக கனிமங்கள் – கிராவல் மற்றும் சாதாரண மண் ஏற்றிச்சென்ற 3 டாரஸ் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க தொடர் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளுமாறு வருவாய் துறை, கனிமவளத் துறை மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றச்செயலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ப்படும். எனவே, குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
