×

தென்காசி அதிமுகவில் உட்கட்சி பூசல்: அதிமுக நிர்வாகி கார் மீது சக நிர்வாகி முட்டை வீசியதால் பரபரப்பு

 

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுகவினர் இடையே உட்கட்சி பூசல் உச்சகட்டம் அடைந்தது. சங்கரன்கோவில் அருகே பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக நிர்வாகிகளை கட்சியை சேர்ந்த பிரமுகர்களே முட்டையை வீசி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரிருப்பு கிராமத்திற்குள் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரமேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே ஊரை சேர்ந்த கிளை செயலாளர் உடையார் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் முட்டையை வீசி விரட்டியடித்தார். பாஜகவுக்கு வாக்கு கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என்று கூறி அதிமுக கிளை செயலாளர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து காரை வழிமறித்து முட்டைகளை வீசி எறிந்தார். எதிர்ப்பை கண்டு பின்வாங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் காரை பின்னோக்கி எடுத்து கொண்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகியை அதிமுக கட்சியினரே விரட்டியெடுத்த சம்பவம் வாசுதேவநல்லூர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tenkasi Expressway ,TENKASI ,ARCHDIOCESE ,VASUDEVANALLUR ,BJP ,Sankaranko ,
× RELATED லெபனான்போர் நிறுத்த ஒப்பந்தம்...