குன்னூர், ஏப். 16: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத் துறையினர் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு பழச்சாறு விற்பனை துவங்கி உள்ளது. குன்னூரில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான சூழலைத் தேடி சுற்றுலா பயணிகளின் வருகை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு இதமளிக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்காவின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஜூஸ் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தோட்டக்கலைத் துறையினரால் நேரடியாக தயாரிக்கப்படும் அன்னாசிப் பழம் மற்றும் திராட்சை பழச்சாறுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பழச்சாறுகள், ஒரு டம்ளர் ரூ.20க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலைத் துறையினரின் இந்த முயற்சிக்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பூங்காவிற்கு வரும் பயணிகள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த பழச்சாறுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
