சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்பி கூறுகையில், ‘‘மகளிருக்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. ஏற்கனவே 543 பேர் பாராளுமன்ற உள்ள நிலையிலேயே நமக்கு பேச நேரம் கிடைப்பது இல்லை. அதனை 850 ஆக உயர்த்த வேண்டும் என கூறுகின்றனர். முதலில் அனைத்து மாநிலங்களிலும் சரிசமமாக உயர்த்துவோம் என கூறினார்கள். ஆனால் மசோதாவை எடுத்து பார்க்கும் போது, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யவுள்ளதாக கூறுகிறார்கள்.
இதன்படி இந்தியாவில் 121 கோடி மக்கள் தொகை உள்ளது. 854ல் அதனை வகுத்தால் 14 லட்சம் பேருக்கு ஒரு எம்பி தொகுதியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 39 எம்பியில் இருந்து 51 ஆக உயரும். ஆனால் உபி 80ல் இருந்து 143 ஆக உயரும். தற்போது தமிழ்நாட்டிற்கும், உபிக்கு உள்ள வித்தியாசம் 40 தொகுதிகள். புதுகணக்கின்படி தமிழ்நாடு 50க்கு போகும். அவர்கள் 143க்கு சென்று விடுவார்கள்.
ஏற்கனவே அதிக வரி கட்டுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதனை அமல்படுத்தினால் தமிழ்நாட்டின் குரல் இந்திய அரசியலில் குறைந்துகொண்டே போகும். எந்த காலத்திலும் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெண்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என்றால் 543ல் மூன்றில் ஒரு பங்கு தரலாம். மக்களை தொகை அடிப்படையில் சீரமைத்தால் தமிழ்நாடு மட்டுமல்ல பல தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இந்த சட்டம் அமல்படுத்த வாய்ப்பே இல்லை. 3ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் தான் இதனை அமல்படுத்த முடியும்.
நாங்கள் அனைவரும் பாராளுமன்றம் செல்ல உள்ளோம். இதனை எதிர்த்து வாக்களித்து முற்றுப்புள்ளி வைப்போம். இந்த மசோதாவை பொறுத்தவரை நிச்சயம் 3ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் தான் கொண்டுவர முடியும். தேர்தல் நடக்கும் போது இதற்கு என்ன அவசரம்? தேர்தல் முடிந்தவுடன் கொண்டு வந்து இருக்கலாம். நாங்கள் வரமாட்டோம் என நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து அனைவரும் செல்லவுள்ளோம். இதனை எதிர்த்து வாக்களிக்க உள்ளோம்’’ என்றார்.
