மும்பை: பல்வேறு மொழிகளில் நிதேஷ் திவாரி 2 பாகங்களாக இயக்கியுள்ள ‘ராமாயணா’ என்ற படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், மண்டோதரியாக காஜல் அகர்வால், தசரத சக்ரவர்த்தியாக அருண் கோவில், லட்சுமணனாக ரவி துபே, ஹனுமனாக சன்னி தியோல், கைகேயியாக ஷோபனா நடித்துள்ளனர். சூர்ப்பனகை கேரக்டரில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் கூறுகையில், ‘இது வெறும் திரைப்படம் கிடையாது. பல்வேறு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கிய படம்.
ராமாயணம் போன்ற உலகளாவிய கதை கொண்ட படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது திரைப்படத்தையும் தாண்டிய ஒரு பயணமாகும். நமது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் கதையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் அற்புதமான மற்றும் ஒரு அரிய வாய்ப்பு. இப்படத்தின் மூலம் நமது நாட்டை உலக அரங்கில் முக்கியத்துவப்படுத்துகிறோம். அந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களுடன் ரசிகர்களும், பார்வையாளர்களும் இணைந்து, பிரமிக்க வைக்கும் ராமாயண உலகிற்குள் நுழையும் அந்த தருணத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
